அரியவன் படத்துக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது... மித்ரன் R ஜவஹர் சொன்ன அதிர்ச்சியான உண்மை
சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
இந்தப் படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியிருந்தார், இதனைத் தொடர்ந்து தற்போது மாதவன் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இதனிடையே மார்ச் 3ம் தேதி வெளியாகவுள்ள அரியவன் படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு அரியவன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் கலந்துகொள்ளாத நிலையில், தற்போது இதுகுறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அரியவன் பட சர்ச்சை
சில தினங்களுக்கு முன்னர் அரியவன் படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. எம்ஜிபி மாஸ் மீடியா தயாரித்துள்ள இந்தப் படத்தில், ஈஷான், ப்ரணாலி ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகின்றனர். கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ளதாக படக்குழு விளம்பரம் செய்தது. அரியவன் ட்ரெய்லரில் கூட மித்ரன் ஆர் ஜவஹர் தான் இயக்குநர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் திரையுலகில் பெரும் சர்ச்சையானது.

மாதவனுடன் புதிய கூட்டணி
தனுஷ், நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மித்ரன் ஆர் ஜவஹர். தொடர்ந்து தனுஷின் குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம் படங்களை இயக்கியிருந்தார். கடந்தாண்டு வெளியான திருச்சிற்றம்பலம் சூப்பர் ஹிட்டானதோடு பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனையடுத்து மாதவன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக சில தினங்களுக்கு தனது ட்விட்டரில் அறிவித்தார் மித்ரன் ஜவஹர்.

அரியவன் சர்ச்சைக்கு விளக்கம்
இதனால் பலருக்கும் அரியவன் படம் மீதான சந்தேகம் வலுத்தது. எவ்வித அறிவிப்பும் இல்லாமல் அரியவன் படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் எப்போது இயக்கினார் என்ற கேள்வி எழுந்தது. முக்கியமாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மித்ரன் ஜவஹர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அரியவன் படம் பற்றி பேசிய பிரபலங்கள் மித்ரனுக்கு நன்றி தெரிவித்தனர். அரியவன் பட விளம்பரங்களிலும் மித்ரன் ஜவஹர் பெயர் இடம்பெற்றுள்ளதால், தற்போது அதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

அரியவன் படத்துடன் சம்பந்தம் இல்லை
அதில், "அரியவன் படத்தை தனது உதவியாளர் ஒருவர்தான் இயக்கியுள்ளார். நான் கதை டிஸ்கஷன், ஷூட்டிங் என சில இடங்களில் மட்டும் உதவி செய்துள்ளேன். அதை தவிர எனக்கும் அரியவன் படத்துக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும், அரியவன் பட விளம்பரத்திலும் தனது பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மாதவன் நடிக்கும் எனது அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டேன்" எனக் கூறியுள்ளார்.

மாதவன் படத்தில் இணையும் பிரபலம்
மாதவன் நடிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் படத்தை இயக்கும் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, விடுதலை படங்களைத் தொடர்ந்து மாதவன் - மித்ரன் ஜவஹர் படத்திலும் ஜெயமோகன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











