யாரடி நீ மோகினி ரீ ரிலீஸ்.. கமலா தியேட்டரில் கண் கலங்கிய மித்ரன் ஜவஹர்.. ரசிகர்கள் அன்பு அப்படி!
சென்னை: மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், ரகுவரன், நயன்தாரா, கருணாஸ், கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2008ம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி இன்று தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது.
கமலா சினிமாஸ் ஏற்கனவே யாரடி நீ மோகினி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை ரீ ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்திருந்தார்.

புதிய தமிழ் படங்கள் சொதப்பி வரும் நிலையில், பழைய சூப்பர் ஹிட் படங்களை மறுபடியும் வெளியிட்டு முடிந்த வரை கலெக்ஷனை அள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
யாரடி நீ மோகினி: விஜய்க்கு ஒரு கில்லி படம் என்றால் தனுஷுக்கு ஒரு யாரடி நீ மோகினி என எப்போதும் சொல்லும் அளவுக்கு காதல், நட்பு, பாசம், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்து அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைத்த படம் தான் யாரடி நீ மோகினி. தெலுங்கில் செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷ் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த யாரடி நீ மோகினி என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன கதை: அப்பா தயவில் வாழ கூடாது என நினைக்கும் ஹீரோ ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர நினைக்கிறார். அங்கே அவரது முயற்சியை பார்த்து வேலை வாங்கித் தரும் ஹீரோயின் மீது காதல் ஏற்படுகிறது. தனது காதலை அந்த பெண்ணிடம் சொல்ல அவர் அந்த இளைஞரையும் அவரது அப்பாவையும் அசிங்கப்படுத்தி விடுகிறார். இதனால், மன வேதனையில் அவரது அப்பா இறந்து விடுகிறார். தனது திருமணத்துக்காக ஊருக்கு செல்லும் ஹீரோயினுடன் அவர் நிராகரித்த ஹீரோவை ஹீரோவின் நண்பன் கூடவே அழைத்துக் கொண்டு கிராமத்துக்குச் செல்கிறார். கடைசியில், தன்னை உருகி உருகி காதலித்த காதலனையே ஹீரோயின் கரம் பிடிக்கிறாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை. தனுஷ், நயன்தாரா, ரகுவரன் மற்றும் கார்த்திக் குமாரின் நடிப்பு கச்சிதமாக அமைந்திருக்கும்.
பாடல்கள் சூப்பர் ஹிட்: யுவன் சங்கர் ராஜா இசையில் யாரடி நீ மோகினி படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட். அதிலும், "வெண்மேகம் பெண்ணாக உருவானதோ" பாடல் அந்த பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்து இன்று வரை பல ரசிகர்களை கவர்ந்துள்ள பாடல். தியேட்டரில் அந்த பாடல் வரும் போது ஒட்டுமொத்த தியேட்டரும் எழுந்து அந்த பாடலை பாட பின்னாடி படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹரே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
தியேட்டரில் ஆனந்தக் கண்ணீர் விட்ட இயக்குநர்: கமலா தியேட்டர் ஓனர், தோ அங்க பாருங்க படத்தின் இயக்குநரே உட்கார்ந்து இருக்கிறார் என கை காட்ட, ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று மித்ரன் ஜவஹருக்கு கைதட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர். எல்லோரையும் பார்த்து கையெடுத்து வணங்கிய இயக்குநர் சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
திருச்சிற்றம்பலம்: யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தனுஷ் உடன் இணைந்து மித்ரன் ஜவஹர் இயக்கிய திருச்சிற்றம்பலம் மிகப்பெரிய வெற்றிப் பெற்று 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது. மீண்டும் தனுஷ் உடன் இணைந்து ஒரு படம் பண்ணுங்க மித்ரன் ஜவஹர் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். யாரடி நீ மோகினி படத்தை முதல் நாள் பார்க்கும் போது ஏற்பட்ட சந்தோஷம் அதன் ரீ ரிலீஸிலும் மித்ரன் ஜவஹருக்கு கிடைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











