13வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ’ம்’ திரைப்படம்.. அப்படி என்ன கதை தெரியுமா?
பெங்களூரு: 13வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு "Mmmm (Sound of Pain)" படம் தேர்வாகி உள்ளது.

முதல்முறையாக குரும்பா இன மக்கள் பேசும் மொழியில் உருவான இந்த படத்தை கர்நாடக அரசு பெங்களூருவில் நடைபெற உள்ள 13வது சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்துள்ளது. ஐ.எம். விஜயன் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் சமீபத்தில் ஏகப்பட்ட சர்வதேச அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 8வது ராஜஸ்தான் சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்த படம் பங்கேற்றது. மேலும், இந்திய அரசு சார்பாக ஆஸ்கர் போட்டிக்கு போட்டியிடவும் இந்த படம் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் உள்ள அட்டப்பாடி குரும்பா இனத்தவர்கள் பேசும் குரும்பா மொழியில் முதன்முறையாக உருவாகி உள்ளது இந்த திரைப்படம்.
சத்தத்தின் வலி என்கிற அர்த்தத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் கதை என்னவென்றால், சுற்றுப்புற சூழல் காரணமாக மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை இயக்குநர் விஜிஷ் மணி தத்ரூபமாக படமாக்கி உள்ளார்.
தேனை எடுத்து வியாபாரம் செய்துவரும் மலைவாசியான நாயகன் சுற்றுப்புறச் சூழல் காரணமாக தேன் உற்பத்தி குறைந்து வருவதால் படும் அவதிகள் தான் இந்த படத்தின் கதை. சுற்றுப்புற சூழல், பருவமாற்றம் உள்ளிட்ட சமுதாய பிரச்சனைகளை மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்துடன் கலந்து இயக்குநர் சொல்லியிருக்கும் விதம் அற்புதம். இந்த படத்திற்கு தேசிய விருது வென்ற லெனின் எடிட் செய்துள்ளார்.
சான் டைகோ திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை இந்த படம் வென்றுள்ளது. மேலும், பாரீஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 5 வெளிநாட்டு படங்களை பின்னுக்குத் தள்ளி சிறந்த படத்திற்கான விருதை இந்த படம் வென்றுள்ளது. நவாடா சர்வதேச திரைப்பட விருது விழாவில் ஸ்பெஷல் ஜூரி விருதையும் இந்த படம் கைப்பற்றியுள்ளது.
ஐ.எம். விஜயன், பழனிசாமி, விஎம் லதீஃப், தங்கராஜ், செம்மலர், நஞ்சம்மா, மாஸ்டர் ஆதர்ஷ், குழந்தை நட்சத்திரம் ரேச்சல் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஜுபைர் முகமது இசையமைக்க, பின்னணி இசையை மட்டும் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். மோகன் ஒளிப்பதிவு செய்ய சோஹன் ராய் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
சர்வதேச விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ள இந்த 'ம்' திரைப்படம் பெங்களூருவில் நடைபெறவுள்ள 13வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் நிலையில், விருதுகளை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications