இன்னும் 10 நாட்கள் தான்.. ஆண்டவருக்கு கிடைக்கப் போகும் பெரிய பொறுப்பு.. என்ன செய்யப் போறாரோ?
சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களை உறுப்பினராக கடந்த ஜூன் 12ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் வரும் 25ஆம் தேதி, அதாவது ஜூலை 25 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாநிலங்களை உறுப்பினராக பொறுப்பேற்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் கமல்ஹாசன். அப்போதே ஏற்பட்ட உடன்படிக்கையின் படி, திமுக கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் படி திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் வரும் 25ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பொறுப்பேற்கவுள்ளார் என்ற அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதில், " நாடாளுமன்றத்தில் தலைவர் கமல்ஹாசன் பதவியேற்பு. மக்கள் நீதி மய்யம் தலைவர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
மாநிலங்களவை உறுப்பினர்: தலைவர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் வருகிற ஜூலை 25-ஆம் தேதி அன்று (25-07-2025) நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கமல்ஹாசன் ரசிர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது மட்டும் இல்லாமல், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் பலரும் கமல்ஹாசனின் கன்னிப்பேச்சு மாநிலங்களவையில் எப்படி இருக்கும்? எதைப் பற்றி இருக்கும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
என்ன பேசுவார்: இது ஒரு புறம் இருக்க, பதவியேற்பின் போது கமல்ஹாசன் என்ன முழக்கங்களை முன் வைப்பார் எனவும் சிலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். அதேபோல், கமல்ஹாசன் தனது முதல் பேச்சை தமிழில் பேசுவாரா? அல்லது ஆங்கிலத்தில் பேசுவாரா, தமிழில் அவர் பேசினால் அது வேற லெவலில் இருக்குமே, இந்தியன் தாத்தாவைப் போல பேசுவாரா என்றெல்லாம் இணையவாசிகள் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.

சினிமா வாழ்க்கை: கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு படங்களான இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் படுதோல்வி படங்களாக மாறியது. இப்போது கமல்ஹாசன் சண்டைப் பயிற்சி மாஸ்டர்களான அன்பறிவ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











