Kamal Haasan: எம்.பி. ஆன ஆண்டவர்.. அச்சோ அந்த சிரிப்பை பாருங்க.. மக்கள் நீதி மய்யத்தின் முதல் MP!
சென்னை: திரைத்துறையில் பன்முகக் கலைஞர், அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவருக்கு திரைத்துறையினர் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கமல்ஹாசன் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார் கமல் ஹாசன். கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டு அதாவது 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இவரது கட்சி முதன் முதலாக தேர்தலைச் சந்தித்தது. இந்த தேர்தலில் கிட்டத்தட்ட மாநிலங்கள் முழுவதும் சுமார் 15 லட்ச வாக்குகளைப் பெற்றது. அதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
அதன் பின்னர் கட்சியில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் கட்சியில் இருந்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலகி, திமுகவில் இணைந்தனர். அதேபோல் கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார். இதனால் இவர் காங்கிரஸ் உடன் கை கோர்க்க போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணிக்காக பிரசாரம் செய்தார்.

கமல்ஹாசன்: அந்த தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராக ஒரு இடம் வழங்கப்படும் என கூட்டணி முடிவு செய்யப்பட்டது. இதனால் கமல்ஹாசன் திமுக வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்தார். அதுவும் தனது மக்கள் நீதி மய்யம் பிரச்சார வாகனத்திலேயே பிரச்சாரமும் செய்தார். இந்நிலையில் இவர் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை எம்.பி: இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் போது திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உடன் இருந்தார். அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார். இந்நிலையில் இன்று திமுக சார்பில் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தல் அதிகாரியிடம் அதற்கான சான்றிதழை கமல்ஹாசன் புன்னகையோடு வாங்கிக் கொண்டார். இந்நிலையில் இவருக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
வாழ்த்து: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்துக் குறிப்பில், " மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து கழக அணி சார்பில் தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சார், கழக வழக்கறிஞர் அண்ணன் வில்சன், சேலம் கிழக்கு மாவட்டக்கழகச் செயலாளர் அண்ணன் சேலம் சிவலிங்கம், அக்கா கவிஞர் சல்மா ஆகியோர், எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து இன்று பெற்ற போது நாம் உடனிருந்தோம். மாநிலங்களவையில் அவர்களின் பணி சிறக்க வாழ்த்தினோம்" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











