பிரைம் வீடியோவின் 'மாடர்ன் லவ் சென்னை' முன்னோட்டம் வெளியீடு

டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 'மாடர்ன் லவ் சென்னை' எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது. பிரைம் வீடியோவில் மே 18 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் ஒப்பற்ற ஆளுமைகளான பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந்து இதனை இயக்கியிருக்கிறார்கள்.

படைப்பு உருவாக்க ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன் குமாரராஜா பேசுகையில், ப்ரைம் வீடியோவின் மாடர்ன் லவ் சென்னை எனும் ஆந்தாலஜி பாணியிலான திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் படைப்பாளிகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் வணக்கம். இந்த ஆந்தாலஜி பாணியிலான படைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்ட அனுபவம் உள்ளார்ந்த அனுபவமாக இருந்தது. தொடக்கத்தில் எட்டு மாத கால அவகாசத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். ஆனால் இரண்டரை ஆண்டுகளாகிவிட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் மறக்க இயலாத அனுபவமாக மாறியது. இருப்பினும் இந்த படைப்பு சர்வதேச தரத்தில் உருவாகி இருக்கிறது.

Modern Love Trailer Released

நியூயார்க் டைம்ஸ் எனும் நாளிதழில் 'மாடர்ன் லவ்' எனும் தலைப்பில், அதன் வாசகர்கள் தங்களது அனுபவத்தை கட்டுரை வடிவில் பகிர்ந்து கொண்டனர். அந்தக் கட்டுரை ஆயிர கணக்கை கடந்த பிறகு, இதனை ஒரு நிகழ்ச்சியாக ஏன் உருவாக்கக் கூடாது என ஒருவர் சிந்தித்தார். அதன் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக முதல் சீசன் வெளியானது. இதில் எட்டு கதைகளை தேர்ந்தெடுத்து ஆங்கில மொழியில் ஒளிபரப்பானது. இதன் வெற்றிக்குப் பிறகு, இரண்டாவது சீசனை ஆங்கில மொழியை கடந்து, சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும் என்றும், அதனை இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று இந்திய மொழிகளில் உருவாக்க வேண்டும் என்றும் திட்டமிடுகிறார்கள். இந்தியிலும், தெலுங்கிலும், 'மாடர்ன் லவ் மும்பை', 'மாடர்ன் லவ் ஹைதராபாத்' எனும் பெயரில் வெளியாகி வெற்றியைப் பெற்றிருக்கிறது. தற்போது தமிழில், 'மாடர்ன் லவ் சென்னை' எனும் பெயரில் தயாராகி இருக்கிறது.

தமிழில் இடம் பெற்றிருக்கும் ஆறு கதைகளும் ஏற்கனவே வெளியான கதைகள் அல்ல. நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான எட்டு கட்டுரைகளை தேர்ந்தெடுத்து, அதனை திரைக்கதையாக்கி படைப்பாக வழங்கினர். அதேபோல் ஜப்பனீஸ், டச்சு, ஸ்பானிஷ் என ஒவ்வொரு மொழிகளிலும் வித்தியாசமான கட்டுரைகளை படைப்பாக்கி வழங்கினர்.

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், '' நான் பாரம்பரிய பிடிப்புள்ள மனிதன். திரைத்துறையில் ஐம்பது ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். வழக்கமான படைப்புகளில் இருந்து திசை மாறி புதுமையாக சொல்ல வேண்டும் என விரும்புவதுண்டு. இதனை எனது புதிய நண்பரான இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா சாத்தியப்படுத்தி இருக்கிறார். அவருடைய படைப்புகளில் வீரியமும், புதுமையும் இருக்கும். என்னை காதல் கதைகளை.. காதல் உணர்வுகளை.. காட்சிப்படுத்துவதில் மன்னன் என்று சொல்வதுண்டு. காதல் இல்லையேல் வாழ்க்கை இல்லை. காதலிக்கவில்லை என்றால் கலைஞனாக முடியாது. காதல் என்பது இதுதான் என எந்த வரையறையும் இல்லை. காதல் என்பது மென்மையானது

எனக்கு வயதாவதில்லை. வயதைக் குறித்து நான் எப்போதும் கவலைபட்டதில்லை. இன்றும் நான் இளைஞனாகவும், இளமையாகவும் உணர்கிறேன். இந்த 84 வயதிலும் காதலிக்கிறேன் என்பதனை தைரியமாக சொல்கிறேன்.

எனக்கு ஒன்பதாவது படிக்கும்போது ஒரு காதல் ஏற்பட்டது. அதன் பிறகு சென்னைக்கு வந்தவுடன் இங்கும் மற்றொரு காதல் உண்டானது. அதன் பிறகு காலங்கள் மாற மாற நான்கு காதல்கள் ஏற்பட்டது.

நான்கு காதல்கள் இருக்கிறது என்கிறீர்களே..! இதில் எங்கே காதல்? என்று கேட்டால், இந்த குடை தான் நிழல் தரும் என கருதக்கூடாது. நமக்கு எந்தக் குடையும் நிழல் தரும் என நினைக்க வேண்டும். நிழல் தரும் அந்த நான்கு குடைகளையும் என்னால் மறக்க இயலாது. ஏனெனில் காதல் இல்லாமல் இருக்க இயலாது. காதல் தவிர்க்க முடியாதது. அவசியமானது.

Modern Love Trailer Released

'பறவை கூட்டில் வாழும் மான்' எனும் அத்தியாயத்தை இயக்க வாய்ப்பளித்ததற்காக அமேசான் பிரைம், தியாகராஜன் குமாரராஜா, அதில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இசைஞானி இளையராஜா இந்த பாணிகளான படைப்புகளுக்கு எம் மாதிரியான இசையை வழங்குவார் என்று ஆவலோடு காத்திருந்தேன் ஆனால் அவர் தன்னுடைய மாயாஜால வித்தை காட்டி என்னை அசத்தி விட்டார்.'' என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், '' என்னுடைய கனவு நனவாகி இருக்கிறது. திறமை வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அவர்களின் திரைத்துறை மீதான பற்று அலாதியானது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி சக்திவேல் ஆகியோரின் பணியாற்றும் ஸ்டைல் தனித்துவமாக இருக்கும். 'இமைகள்' அத்தியாயத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கருடன் இணைந்து பணியாற்றியதும் மகிழ்ச்சியானது. இதனை நன்கு அனுபவித்து நடித்திருக்கிறேன். நிறைய நுட்பமான விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த அனுபவம் அற்புதமானது. இந்த படத்தில் டிஜே பானுவுடன் இணைந்து நடித்திருப்பதும் மகிழ்ச்சியானது. தியாகராஜன் குமாரராஜா சார் அழைப்பு விடுத்தவுடன் நடிக்க மனதளவில் தயாராக இருந்தேன். அதிலும் பாலாஜி சக்திவேல் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்றதும் கதை எதையும் கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டேன். புதுமுக இயக்குநர்களுடன் பணியாற்றுவது எப்போதுமே இனிமையானதாக தான் இருக்கும். அதிலும் நல்ல அனுபவம் உள்ள பாலாஜி சக்திவேல் பணியாற்றும்போது. அவர் காட்சியை விவரிக்கும் விதம்.. நடிப்பை வாங்கும் விதம்.. மிகவும் உத்வேகம் அளிக்க கூடியதாக இருந்தது. அவரின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறேன். இதுவரை அவரிடமிருந்து அழைப்பு வரவில்லை. விரைவில் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்'' என்றார்.

இயக்குநர் ராஜுமுருகன் பேசுகையில், '' ஏழு வயதில் ஒரு இரவு நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் தங்குவதற்காக தயக்கம் தெரிவித்து அருகில் உள்ள திரையரங்கத்தில் பாரதிராஜாவின் 'கடலோரக் கவிதைகள்' எனும் திரைப்படத்தை பார்ப்பதற்காக என்னுடைய தந்தையார் என்னை முதன் முதலாக அழைத்துச் சென்றார். ஏழு வயதில் நான் பார்த்த முதல் திரைப்படமே காதல் திரைப்படம் தான். அந்த திரைப்படம் மனதில் ஏற்படுத்திய சலனங்கள், என்னுடைய ஆழ்மனதில் பதிந்தன. அந்தத் திரைப்படத்தை ஏறக்குறைய நூறு முறைக்கு மேல் பார்த்திருப்பேன். அதில் இடம்பெறும் அனைத்து வசனங்களும் எனக்கு அத்துபடி. இவைதான் என்னை கலை உலகத்திற்கு அழைத்து வந்திருக்கும். அத்தகைய பாதிப்பை ஏற்படுத்திய இயக்குநருடன் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியான அனுபவம். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிற்கும் அமேசான் பிரைம் வீடியோவிற்கும் நன்றி.‌

கொரோனா காலகட்டத்தின் போது நண்பர் தியாகராஜன் குமாரராஜா போன் மூலம் தொடர்பு கொண்டு மார்டன் லவ் படைப்பை குறித்து பேசினார். அந்த காலகட்டத்தின் போது பலரும் மன அழுத்தத்தில் இருந்தனர். எனக்கு எதையாவது எழுதத் தொடங்கினால் உடனடியாக அரசியல் வந்துவிடுகிறது. இது மிகப்பெரும் சிக்கலாக உருவெடுத்து விட்டது. இந்த மன சிக்கலிலிருந்து வெளியே வரவேண்டும் என்று நானே பல காலமாக திட்டமிட்டிருந்தேன். அதன் போது தியாகராஜன் குமாரராஜா மாடர்ன் லவ் என்று சொன்னதும் உடனடியாக ஒப்புக் கொண்டேன் அமேசான் பிரைம் வீடியோவின் மாடர்ன் லவ் எனும் அசல் இணையத் தொடரை கண்டு ரசித்தேன்.

அண்மையில் ஒரு வார இதழில் கதை ஒன்றுக்கு ஓவியம் வரைந்து அதன் மீது AI என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஓவியம் சிறப்பாக இருந்தது. அவர் ஓவியர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு என விவரித்தனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஓவியம் வரைய இயலும். அந்த இதழில் கவிதை ஒன்றையும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் எழுதப்பட்டு, இடம் பெற்றிருந்தது. அமெரிக்காவில் உள்ள எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியையும் கண்டேன்.

உலகம் மாற மாற அனைத்துக்கும் ஒரு மாற்று வழி வந்து விட்டது. ஆனால் மனிதனுக்கு மாற்று கிடைக்காத ஒரே விசயம் காதல்தான். அன்பு செலுத்த இயந்திரங்களுக்கு தெரியாது. ஒருவேளை உடலுறவைக் கூட இயந்திரங்கள் வழங்கலாம். ஆனால் அன்பை செலுத்த தெரியாது. ஏனெனில் காதல் என்பது ஒரு உணர்வு. அதனால் தான் காதல் எப்போதும் அனைத்து இடத்தில் இருக்கிறது.

வன்முறை எண்ணங்களுக்கு மாற்று அன்பு மட்டும் தான். ஒரு சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திச் செல்ல வேண்டும் என்றால், மக்களை அன்பு மயப்படுத்த வேண்டும். மனிதர்கள் அடிப்படையில் வேட்டையாடிகள் தான். இதைத்தான் அம்பேத்கரும், பெரியாரும், தேர்தல் அரசியலை தவிர்த்து மக்களை மனித நேயத்திற்கு பழக்கப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தினர். அன்பை போதிப்பது காதல் மட்டும் தான்.

காதலின் அனைத்து கோணங்களும் இந்த அத்தியாயங்களில் இடம் பிடித்திருக்கிறது. இன்றைய சூழலில் கிரைம் திரில்லர், ஆக்சன் படைப்புகள் அதிகம் வெளியாகி மக்களின் மனதை திசை திருப்பி அழைத்துச் செல்கிறது. இத்தகைய சூழலில் காதலை முதன்மைப்படுத்தி படைப்பை உருவாக்குவது அவசியமானது. இதன் காரணமாகத்தான் இந்த அத்தியாயத்தை இயக்க ஒப்புக் கொண்டேன்.

'லாலாகுண்டா பொம்மைகள்' என்பது சென்னையில் உள்ள ஒரு பகுதி. இந்தப் பகுதியில் நடைபெறும் கதை. நாம் அனைவரும் பொம்மைகள்தான். '' என்றார்.

நடிகை ரித்து வர்மா பேசுகையில், '' காதல் உறவுகளை பற்றி ஆறு அத்தியாயங்களில் பேசியிருக்கும் படைப்பு. வாழ்க்கையில் காதல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விவரிக்கும் படைப்பாக இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் இடம் பெறும் என்னுடைய கதாபாத்திரத்திற்கும், எனக்கும் பெரிதாக ஒற்றுமை இல்லை. ஏனெனில் எனக்கு காதல் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் இந்தப் படைப்பில் பட குழுவினருடன் இணைந்து பணியாற்றிய போது மறக்க இயலாத அனுபவமும், அன்பும் கிடைத்தது. மாடர்ன் லவ் சென்னையை பார்த்து ரசித்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.'' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X