நம் நாடும் அப்படித்தான்.. அதை கெடுத்துவிட்டோம்.. ஓபனாக பேசிய மோகன் பாபு மகன்
சென்னை: தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவர் மோகன் பாபு. இவர் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தமிழிலும் சூரரைப் போற்று உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் இவருக்கு விஷ்ணு மஞ்சு என்ற மகன் இருக்கிறார். இவரும் டோலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் இப்போது கண்ணப்பா என்ற படத்தில் நடித்திருக்கிறார். படமானது ஏப்ரல் 25ஆம் தேதி பான் இந்தியா அளவில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மோகன் பாபு என்றாலே தெலுங்கு திரையுலகில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு ஃபேமஸ் ஆனவர். இவருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு லட்சுமி என்ற மகளும், விஷ்ணு மஞ்சு என்ற மகனும் பிறந்தார்கள். இரண்டாவது மனைவிக்கு மனோஜ் என்ற மகன் பிறந்தார். சமீபத்தில்கூட மனோஜுக்கும், மோகன் பாபுவுக்கும் சொத்து விஷயத்தில் முட்டிக்கொண்டது. அப்போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை மோகன் பாபு அடிக்க பாய்ந்தது நினைவிருக்கலாம்.

விஷ்ணு மஞ்சு: இதற்கிடையே விஷ்ணு மஞ்சுவும் தனது தந்தை போன்றே நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் 2003ஆம் ஆண்டு விஷ்ணு என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதினை தட்டி சென்றால் விஷ்ணு. அதன் பிறகு சூர்யம், பொலிடிக்கல் ரவுடி போன்ற படங்களில் நடித்தார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக சக்சஸ்ஃபுல் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் கடைசியாக 2022ஆம் ஆண்டு Ginna என்ற படத்தில் நடித்தார்.
கண்ணப்பா: இந்தச் சூழலில் அவர் தற்போது கண்ணப்பா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு அவரே திரைக்கதை எழுத கோபால கிருஷ்ண, ஈஸ்வர ரெட்டி, தோட்டா பிரசாத், நாகேஸ்வர ரெட்டி ஆகியோர் கதை எழுதியிருக்கிறார்கள். முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். இதில் விஷ்ணுவுடன் சரத்குமார், மோகன் லால், மோகன் பாபு, அக்ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் 25ஆம் தேதி பான் இந்தியா அளவில் படம் ரிலீஸாகவிருக்கிறது.
விஷ்ணு மஞ்சு பேச்சு: இந்நிலையில் சென்னையில் நடந்த விழாவில் கலந்துகொண்ட விஷ்ணு மஞ்சு பேசுகையில், "நான் சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். தமிழ் நன்றாகவே பேசுவேன். நான் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே தமிழில் படம் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று அது நிறைவேறியிருக்கிறது. கண்ணப்பா படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியிருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. சரத்குமாருடன் படம் நடிக்க வேண்டும் 15 வருடங்களுக்கு முன்பாகவே நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். இப்போது அதுவும் நிறைவேறியிருக்கிறது.
என்ன காரணம்: கண்ணப்பா கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். அதற்காக நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறோம். மூன்றாவது நூற்றாண்டில்தான் இந்தக் கதை நடக்கிறது. அப்போது நீர், வனம், காற்று என அனைத்தும் அவ்வளவு பசுமையாக இருந்திருக்கும். உலகின் பல நாடுகளுக்கு சென்று பார்த்தபோது நியூசிலாந்துதான் எங்களுக்கு செட் ஆனது. கடவுள் வரைந்த கடைசி ஓவியம் என்றால் அது அந்த நாடுதான். நமது நாடும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்திருக்கும். ஆனால் இப்போது நாம் அதனை கெடுத்துவிட்டோம்.படத்தில் சில காட்சிகளை கிராஃபிக்ஸ் என்று நினைப்பீர்கள். ஆனால் அந்த லொகேஷன்கள் அனைத்தும் உண்மையானவை" என்றார்.


Click it and Unblock the Notifications











