TVK - Mohan G: 'அரசியல்வயப்படுங்க பசங்களா'.. தேவர் பட விழாவில் விஜய்யின் தவெகவை விமர்சித்த மோகன் ஜி!
சென்னை: மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவருமான முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர் தேவர் என்ற பெயரில் படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று அதாவது அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்றது. இதில் படக் குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மோகன் ஜி பேசிய போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தொண்டர்கள் குறித்து விமர்சித்து பேசினார்.
அதாவது அவர் பேசுகையில், " தேவரின் வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் தமிழ்நாட்டு அரசியலை உற்றுப் பார்க்க வேண்டும். இதை பல வருடங்களா உற்றுப் பார்த்து பேசுவதால் தான் நாங்கள் பல பழிகளை வாங்கிக் கொண்டு இருக்கிறோம். திரௌபதி 2 படத்தில் வேல ராமமூர்த்தி மிகவும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். படம் 11 ஆம் நூற்றாண்டின் கதை. படப்பிடிப்புத் தளத்திலேயே அவரிடத்தில் ஒரு வேண்டுகோள் வைத்தேன்.
அதாவது தேவர் வாழ்ந்த காலத்தில் நடந்த முக்கியமான சம்பவத்தை மையமாக கொண்டு ஒரு கதையை நீங்கள் எழுதிக் கொடுக்க வேண்டும். அதை நான் படமாக எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தேன். அவரும் சரி என்று சொல்லி உள்ளார். அதற்கான வேலைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

20 நிமிட உரை: எனக்கு தேசியத்தின் மீதும் தெய்வீகத்தின் மீதும் பெரிய ஈர்ப்பு ஏற்படக் காரணமே தேவர் தான். அந்த வார்த்தைகளை நான் அவரிடத்தில் இருந்து தான் தெரிந்து கொள்கிறேன். அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை தலைவராக ஏற்றுக் கொண்டு சுதந்திரத்திற்காக போராடுகிறார். பாராளுமன்றத்திற்கு சென்று அவர் ஆற்றிய 20 நிமிட உரை என்பது மிகவும் முக்கியமானது. அதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் பார்க்க வேண்டும்: தமிழ் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் சென்று படம் பார்க்க வேண்டும். வெறும் இளைஞர்கள் மட்டும் அனிருத்தின் பாடல்கள் இருந்தால் போய் படம் பார்க்கலாம் என்று இல்லாமல், இது போன்ற படங்களையும் பார்க்க வேண்டும். தேவர் எம்.பி., ஆக இருந்த போது இரண்டு ஆண்டுகள் அவரை ஏன் பேச விடவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற விஷயங்களை தெரிந்து கொண்டால் தான் நீங்கள் அரசியல் வயப்படுத்தப்படுவீர்கள்.

தமிழக வெற்றிக் கழகம்: இல்லை என்றால் ஒரு நடிகர் தொடங்கிய கட்சியில் பெரிய கூட்டம் அரசியல் படுத்தப்படாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதுபோலத்தான் கடைசி வரைக்கும் இருக்கனும். நீங்கள் அரசியல் படுத்தப்பட வேண்டும். அப்படி என்றால் முத்துராமலிங்கத் தேவர் மாதிரியான அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்க வேண்டும்" என்று பேசினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை விமர்சித்துள்ளது குறித்தும் பலரும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











