போதைப்பொருள்.. நாலு கல்லூரியை சீல் வைங்க.. திருந்துவாங்க இந்த கல்வி தந்தைகள்.. மோகன் ஜி காட்டம்!
செங்கல்பட்டு: தமிழ்நாட்டிலும் போதைப் பொருள் புழக்கம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி விடுதிகளில் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து போலீஸார் கல்லூரியில் நடத்திய சோதனையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆண்கள் மற்றும் பெண்களின் ஹாஸ்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஏகப்பட்ட போதை மாத்திரைகள், போதை பொருள்கள் சிக்கிய நிலையில், 30 மாணவர்களை இதுதொடர்பாக போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த செய்தியை ஷேர் செய்த இயக்குநர் மோகன். ஜி இதை பற்றி படமெடுத்தால் கிண்டல் பண்ணுவீங்க, இப்போ பாருங்க உண்மை அம்பலமாகி விட்டது என ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் மோகன் ஜி: அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷியை வைத்து பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான மோகன். ஜி இயக்கத்தில் வெளியான திரெளபதி திரைப்படம் நாடக காதலுக்கு எதிரான படமாக உருவாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் நடித்த அந்த படம் குறித்து கலவையான விமர்சனங்கள் குவிந்தன. சாதிய படம் என்கிற முத்திரையும் குத்தப்பட்டது. அந்த படத்தைத் தொடர்ந்து ருத்ர தாண்டவம் படத்தையும் மோகன். ஜி இயக்கினார்.
செல்வராகவனின் பகாசூரன்: ருத்ர தாண்டவம் படத்தைத் தொடர்ந்து செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியான பகாசூரன் படத்தில் கல்லூரியில் நடக்கும் அட்டகாசங்களையும் பெண்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல சில ஆசிரியைகளே ஈடுபடுவது போன்ற காட்சிகளை அந்த படத்தில் காட்டிய நிலையில், அது பெரும் விவாதங்களை கிளப்பியது.
நாலு கல்லூரிக்கு சீல் வைக்கணும்: இந்நிலையில், போதைப் பொருள் புழக்கம் தனியார் கல்லூரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் மோகன். ஜி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இது போல பல கல்லூரி ஹாஸ்டல்ல நடக்குற அநியாயத்தை பற்றி தெளிவா திரையில சொன்னா, பிற்போக்குதனம், பெண்களை படிக்க கூடாது சொல்றான் மோகன் ஜி ன்னு உருட்டுனவன் எல்லாம் வாய திறப்பானா இப்ப.. சாதி முத்திரை வேற குத்துவானுங்க.. நாலு கல்லூரியை சீல் வைங்க.. திருந்துவாங்க இந்த கல்வி தந்தைகள்.." என தனது கோபத்தை கொட்டியுள்ளார்.
தீய பழக்கங்களில் இருந்து இளைஞர்களை மேம்படுத்தவே கல்வி உதவ வேண்டும். ஆனால், கல்வி பயிலும் இடங்களிலேயே படித்த மாணவர்களே இப்படி கெட்ட பழக்கத்துக்கு ஆளானால் எப்படி என்கிற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











