ஒத்த செருப்பு படத்தில் முதலில் இவர்தான் ஹீரோ.. பார்த்திபன் பகிர்ந்த தகவல்
சென்னை: நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் ஒத்த செருப்பு படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருந்த ஹீரோ குறித்து தகவலை வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர் பார்த்திபன். பல படங்களில் அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு புதிய பாதை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்தார். அவருடன் சீதா, மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். புதிய பாதை படம் தேசிய விருது வென்று அசத்தியது.

இயக்குநராக ஜொலித்த பார்த்திபன்
புதிய பாதை கொடுத்த வெற்றியை அடுத்து அவர், உள்ளே வெளியே, ஹவுஸ்ஃபுல், குடைக்குள் மழை என ஏராளமான படங்களை இயக்கினார். அவரது படங்கள் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றாலும் வசூல்ரீதியாக போதிய வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் தான் இயக்கிய ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசத்தை காண்பித்தவர் பார்த்திபன். இயக்கும் படங்கள் தொடர்ந்து சுமார் ஹிட்டானதால் அவர் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

நடிப்பில் மெர்சல் ஆக்கும் பார்த்திபன்
நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த பார்த்திபன் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மன்னர் கதாபாத்திரத்தை ஏற்றார். அந்தக் கதாபாத்திரத்தமாக அவர் நடித்திருந்த நடிப்பு ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து அவர் நானும் ரௌடிதான், பொன்மகள் வந்தாள், பொன்னியின் செல்வன் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துவருகிறார்.

இயக்குநராக ரீ எண்ட்ரி கொடுத்த பார்த்திபன்
இதற்கிடையே கடந்த 2015ஆம் ஆண்டு கதையே இல்லாமல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை இயக்கினார். கதையே இல்லாமல் எடுத்தாலும் பார்த்திபனின் ஸ்க்ரீன் ப்ளேவாலும், மேக்கிங்காலும் அப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு வந்த ரிசல்ட் அப்செட்டையே கொடுத்தது.

ஒரே ஒரு கதாபாத்திரத்தில் ஒத்த செருப்பு
இருப்பினும் மனம் தளராத பார்த்திபன் ஒத்த செருப்பு படத்தை இயக்கினார். பலர் நடித்திருக்கும் படங்கள் மட்டுமே வெளியாகிக்கொண்டிருந்த சூழலில் ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். ஸ்க்ரீனில் படம் முழுக்க தான் மட்டுமே இருந்தாலும் ரசிகர்களுக்கு போர் அடிக்காமல் படத்தை நகர்த்தி சென்று வெற்றியடையவும் வைத்தார். அதனைத் தொடர்ந்து ஒரே ஷாட்டில் இரவின் நிழல் படத்தை இயக்கினார். ஆனால் படம் விமர்சனங்களையே சந்தித்தது. அடுத்ததாக அவர் 63ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு என்ற படத்தை இயக்குகிறார்.

ஒத்த செருப்பு ரீமேக் ஹீரோ மோகன்லால்தான்
ஒத்த செருப்பு படத்தை இப்போது ஹிந்தியிலும் ரீமேக் செய்துவருகிறார் பார்த்திபன். அதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்கிறார். ஆனால் இந்தப் படத்தின் ரீமேக்கில் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ மோகன்லால்தானாம். இதுகுறித்து பார்த்திபன் கூறுகையில், " Alone படத்தை இன்னும் பார்க்கவில்லை. ஒத்த செருப்பை மோகன் லாலை வைத்துதான் ரீமேக் செய்யனும்னு ஆசைப்படேன். அதற்கான முயற்சியும் செய்தேன். எது நடந்ததோ.. அது நன்றாகவே நடந்திருக்கிறது மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











