3 தேசிய விருதுகளை பெற்ற படம்... பிரஷாந்த் நடிப்பில் 'அந்தாதுனை' இயக்குகிறார் 'ரீமேக்' ராஜா
சென்னை: இந்தியில் ஹிட்டான அந்தாதுன் படத்தை பிரஷாந்த் நடிப்பில் மோகன் ராஜா ரீமேக் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து இந்தியில் ஹிட்டான படம், அந்தாதுன். பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படமான இதை, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.
சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமைக்குப் போட்டி நிலவியது.

தியாகராஜன்
தமிழ் ரீமேக்கில் சித்தார்த் நடிக்கிறார் என்றும் தனுஷ் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கினார். இதில் பிரஷாந்த் ஹீரோவாக நடிப்பார் என்று அறிவித்திருந்தார்.

'ஜானி கட்டார்
இதுகுறித்து தியாகராஜன் கூறும்போது, இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை பெற சில நிறுவனங்களும் சில ஹீரோக்களும் போட்டிப் போட்டார்கள். கடைசியில் நான் வாங்கினேன். இயக்குனர் ஸ்ரீராம் ராகவனின் 'ஜானி கட்டார்' திரைப்படத்தை ஜானி என்ற பெயரில் ஏற்கனவே ரீமேக் செய்திருந்தேன்' என்று தெரிவித்திருந்தார்.

பியானோ மாஸ்டர்
அந்தாதுன் படத்தின் கதை, பியானோ மாஸ்டரை பற்றியது. நடிகர் பிரஷாந்த், லண்டன் டிரினிடி கல்லூரியில் பியானோ பயின்றிருக்கிறார் என்பதால் அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்துவார் என்றும் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

மோகன் ராஜா
இந்தப் படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க இருந்ததாகத் தகவல்கள் வெளியாயின. அவர் மற்ற படங்களில் பிசியாக இருப்பதால் முடியவில்லை. இதையடுத்து மோகன் ராஜா இயக்க இருக்கிறார் என்று தெரிகிறது. பல தெலுங்கு ரீமேக் படங்களை இயக்கியுள்ள மோகன் ராஜா, இந்தப் படத்தையும் ரீமேக் செய்கிறார். படத்துக்காக உடல் எடையை குறைத்து வருகிறாராம் பிரஷாந்த்.


Click it and Unblock the Notifications











