தனி ஒருவன் 2 கன்ஃபார்மா வரும்... விஜய்யுடன் மீண்டும் கூட்டணி... மோகன் ராஜாவின் சீக்ரெட் ப்ளான்
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில், ஜெயம் ரவியின் அண்ணனும் இயக்குநருமான மோகன் ராஜா கலந்துகொண்டார்.
அப்போது தனி ஒருவன் இரண்டாம் பாகம், விஜய்யின் வேலாயுதம் படத்தின் செகண்ட் பார்ட் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மோகன் ராஜா, தனி ஒருவன், வேலாயுதம் படங்களின் 2ம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

சொப்பன சுந்தரி ட்ரெய்லர் வெளியீடு
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. எஸ்ஜி சார்லஸ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இந்நிலையில், சொப்பன சுந்தரி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும் இயக்குநருமான மோகன் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

தனி ஒருவன் இரண்டாம் பாகம்
அப்போது அவரிடம் தனி ஒருவன் இரண்டாம் பாகம் குறித்து கேட்கப்பட்டது. 2015ம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் கோலிவுட்டையே அதிர வைத்தது. அதுவரை தெலுங்கில் இருந்து ரீமேக் படங்களை மட்டும் இயக்கி வந்த மோகன் ராஜா, முதன்முறையாக சொந்தமாக ஸ்க்ரிப்ட் எழுதி இயக்கிய படம் தான் தனி ஒருவன். ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் தாறுமாறாக ஹிட் அடித்தது.

பிஸி ஷெட்யூலில் ஜெயம் ரவி, மோகன் ராஜா
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் தவம் கிடந்தனர். ஆனால், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் இணைந்த மோகன் ராஜா, அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு தெலுங்கில் வெளியான சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்தை இயக்கினார். அதேபோல், ஜெயம் ரவியும் மிருதன், அடங்க மறு, கோமாளி, பொன்னியின் செல்வன், அகிலன், இறைவன் போன்ற படங்களில் பிஸியாகிவிட்டார். இதனால் தனி ஒருவன் 2 திரைப்படம் உருவாகுவது தள்ளிக்கொண்டே போனது.

அடுத்த ஆண்டில் கண்டிப்பாக அப்டேட்
இந்நிலையில், சொப்பன சுந்தரி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இதுகுறித்து பேசிய மோகன் ராஜா, நானும் தம்பி ஜெயம் ரவியும் பல வேலைகளில் பிஸியாக இருக்கிறோம். இருவருக்கும் நேரம் கிடைக்கும்போது தனி ஒருவன் செகண்ட் பார்ட் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறினார். அதேபோல், விஜய்யின் வேலாயுதம் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டும் அடுத்த ஆண்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக பதிலளித்தார்.

விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஏற்கனவே தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான ஸ்க்ரிப்ட் ரெடியாகிவிட்டதாக ஜெயம் ரவி கூறியிருந்தார். இப்போது மோகன் ராஜாவும் அதனை உறுதிப்படுத்தியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்னொரு பக்கம் ஏற்கனவே விஜய் - மோகன் ராஜா கூட்டணி மீண்டும் இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது வேலாயுதம் இரண்டாம் பாகத்தில் அது சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











