ஆக்ஷன் அவதாரமெடுக்கும் மோகன்... அதுக்கு சரிப்பட்டு வருவாரா!
சென்னை : மைக் மோகன் என்று அழைக்கப்படும் வெள்ளி விழா நாயகன் மோகன் ஹீரோவாக நடிக்கும் படம் ஹரா. இந்தப் படத்தை விஜய்ஸ்ரீ இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ஊட்டி உள்ளிட்ட இடங்களில் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.

மைக் மோகன்
மைக் மோகன் என்றும் வெள்ளி விழா நாயகன் என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகர் மோகன். இவரது மௌனராகம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்கள். தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்து படங்களில் நடிக்காமல் இருந்தார்.

மீண்டும் நாயகனாக மோகன்
இடையில் சில படங்களில் தோன்றினாலும் இவருக்கு எந்தப் படமும் கைக்கொடுக்கவில்லை. தெலுங்கிலும் சில படங்களில் இவரை காண முடிந்தது. இந்நிலையில் தாதா 87 படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்கத்தில் நடிகர் மோகன் தற்போது ஹரா என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

ஆக்ஷன் அவதாரத்தில் மோகன்
இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் துவங்கியுள்ளது. படத்தின் முதல் காட்சியே சண்டையுடன் துவங்கியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்தப் படத்தில் ஆக்ஷன் அவதாரத்தை எடுத்துள்ளார் மோகன். தொடர்ந்து சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு கோவை மற்றும் ஊட்டியில் சூட்டிங்கை நடத்தவுள்ளது.

மோகனுக்கு ஜோடியான குஷ்பூ
ஐபிசி சட்டங்கள் மற்றும் அதன் பிரிவுகள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருவதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மோகனுக்கு ஜோடியாகியுள்ளார் நடிகை குஷ்பூ. இதன்மூலம் தனது கனவு நனவாகியுள்ளதாக சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

ஆக்ஷன் அவதாரம் கைக்கொடுக்குமா?
எப்போதுமே மோகனை நாம் சாஃப்டான கேரக்டரில்தான் பார்த்திருக்கிறோம். மௌனராகம் படத்தில் அவர் தனது மனைவியின் முன்னாள் காதலுக்கு மதிப்புக் கொடுக்கும் கணவராக நடித்திருப்பார். அத்தகைய சாஃப்டான கேரக்டர்களை ஏற்று நடித்துள்ள மோகனுக்கு ஆக்ஷன் அவதாரம் கைக்கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











