Mohanlal: குழந்தைகளுக்கு இலவச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை.. பிறந்த நாளில் நெஞ்சைத் தொட்ட லால் ஏட்டன்!
கொச்சி: மலையாள சினிமா உலகின் உச்ச நடிகர்களில் ஒருவர் மோகன் லால். மலையாள சினிமாவின் கதாநாயகன் என்றாலும், அவருக்கு தமிழ் நாட்டில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான எம்புரான் மற்றும் தொடரும் ஆகிய படங்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் இன்று அதாவது, மே 21 ஆம் தேதி தனது 65 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
அவரது இந்த 65 வது பிறந்த நாளில் மோகன் லால் பல்வேறு அறிவிப்புகளையும் தனது அடுத்த படத்தின் அப்டேட்டுகள், தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்துள்ளார். மோகன் லால் ஒவ்வொரு அறிவிப்பாக சொல்ல சொல்ல ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து வருகிறார்கள் என்றுதான் கூற வேண்டும். மேலும் தனது பிறந்த நாளில் லால் ஏட்டன் அறிவித்துள்ள அறிவிப்பு ஒன்று ரசிகர்கள் நெஞ்சைத் தொட்டு உள்ளது எனலாம்.
சுயசரிதை: மோகன் லால் கடந்த 47 ஆண்டுகளாக சினிமா உலகில் உள்ளார். மலையாள சினிமாவின் மாஸ் ஹீரோ என்றே இவரைக் குறிப்பிடலாம். இந்நிலையில் இவர் தனது 47 ஆண்டுகால சினிமா வாழ்க்கை குறித்து 1000 பக்கங்களுக்கு சுயசரிதையை எழுதியுள்ளார். முகராகம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தை மலையாளத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை மாத்ருபூமி புத்தக நிலையம் வெளியிடுகிறது. மேலும் இந்த புத்தகம் வரும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

நெஞ்சைத் தொட்ட லால் ஏட்டன்: அடுத்ததாக, தனது 65 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை அர்த்தமுள்ள வகையில், பிறருக்கு பயன்படும் வகையில் மாற்ற பலரும் பாராட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தனது சொந்த என்.ஜி.ஓ அமைப்பான, விஸ்வசாந்தி அறக்கட்டளை மற்றும் பேபி மெமோரியல் மருத்துவமனையுடன் இணைந்து, ஆதரவற்ற நலிவடைந்த குழந்தைகளின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவ உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தனது அறக்கட்டளை மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் குழந்தைகளுக்கான மருத்துவச் செலவை முழுக்க முழுக்க அவரது அறக்கட்டளையே ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு மோகன்லால் ரசிகர்களை கடந்து ஒட்டுமொத்த கேரள மக்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பலரும் மோகன்லாலை பாராட்டியும் வாழ்த்தியும் வருகிறார்கள். மேலும் கேரளாவில் போதைப் பொருட்களுக்கு எதிராக அனைவரும் கைகோர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

அடுத்த பட அப்டேட்: அதேபோல் அவரது நடிப்பில் உருவாகியுள்ள படமான, வ்ருஷபா படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்ற அறிவிப்பை மொத்த படக்குழுவும் தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் அதனை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த ஆண்டில் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் மற்றும் தொடரும் படங்கள் ஹிட் அடித்த நிலையில், இந்த படமும் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











