Mohanlal: 64 வயது சிங்கம்.. 'எம்புரான்' ஃபர்ஸ்ட் லுக்கில் மோகன்லால் எப்படி இருக்காரு பாருங்க!
திருவனந்தபுரம்: விஸ்வநாதன் நாயர் மற்றும் சாந்தா குமார் தம்பதியினருக்கு 1960ம் ஆண்டு மே 21ம் தேதி மகனாக பிறந்த மோகன்லால் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். லாலேட்டன் என திரையுலகமே அவரை கொண்டாடி வரும் நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
1980ம் ஆண்டு தனது 20வது வயதில் மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான மோகன்லால் எனிக்கும் ஒரு திவோசம், கொலகொம்பன், ஹலோ மெட்ராஸ் கேர்ள், திரகல், அழியாத பந்தங்கள், நியான் பிறந்த நாட்டில், நாயகன், ரங்கம் என ஆரம்ப காலக்கட்டத்திலேயே ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மலையாள திரையுலகின் முன்னணி நடிகரானார்.

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், அதன் 2ம் பாகம் எம்புரான் எனும் பெயரில் உருவாகி வருகிறது. மோகன்லால் பிறந்தநாளை முன்னிட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மோகன்லால் வெளியிட்டுள்ளார்.
64 வயது சிங்கம்: ஸ்க்ரீன் பிரசன்ஸ் என்றால் அதை மோகன்லாலிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். அந்தளவுக்கு எளிமையான தோற்றத்தில் வந்தாலும் சிங்கம் போல காட்சிகளில் கர்ஜிப்பார். ஜெயிலர் படத்தில் கேமியோவாக வந்த சீனுக்கே தியேட்டரில் விசில் சத்தம் தெறித்தது. மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் ஏகப்பட்ட படங்களில் மோகன்லால் நடித்துள்ளார். மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மஞ்சு வாரியர் வாழ்த்து: மோகன்லாலின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகை மஞ்சு வாரியர் அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவை ஷேர் செய்து “ஹேப்பி பர்த்டே டியரஸ்ட் லாலேட்டா” என வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஏகப்பட்ட மலையாள பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் எம்புரான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்துள்ளார்.

எம்புரான் ஃபர்ஸ்ட் லுக்: பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் எம்புரான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மோகன்லால் தனது பிறந்தநாள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு தற்போது வழங்கி உள்ளார். ஸ்டீபன் நெடும்பள்ளி எனும் கதாபாத்திரத்தில் மோகன்லால் அந்த படத்தில் நடித்திருப்பார். அவருக்கு சகோதரியாக மஞ்சு வாரியர் நடித்திருப்பார். பிருத்விராஜ் முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருப்பார். வில்லனாக விவேக் ஓபராய் நடித்திருப்பார்.
லூசிஃபர்: 2019ம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் கிளைமேக்ஸிலேயே 2வது பாகத்துக்கான லீடை பிருத்விராஜ் வைத்திருப்பார். முதல் பாகம் மலையாளத்தில் அப்பவே 200 கோடி வசூலை ஈட்டியது. லூசிஃபர் 2 என்கிற எம்புரான் வெளியானால் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இந்த மலையாள படம் வெளியாக காத்திருக்கிறது. மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் 2 அப்டேட் ஏதாவது வெளியாகுமா? என ரசிகர்கள் வழக்கம் போல எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். மோகன்லால் இயக்கி நடித்து வரும் பரோஸ் படத்தின் அப்டேட்டும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











