லோகா ரெக்கார்டுக்கு வேட்டு வைக்க முடிவு செய்த மோகன்லால்.. த்ரிஷ்யம் 3 பிசினஸ் இத்தனை கோடியா?
திருவனந்தபுரம்: மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்துக்கு போட்டியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா சாப்டர் 1: சந்திரா திரைப்படம் மலையாள திரையுலகை அடுத்த கட்டத்திற்கே நகர்த்திக் கொண்டு போய்விட்டது என்றே சொல்லலாம்.
தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்கள் 1000 கோடி வசூலை தாண்டியுள்ள நிலையில், தமிழ் சினிமா அதிகபட்சமாக 600 கோடி வரை கடந்துள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் படம் 240 கோடி அளவுக்கு வசூல் ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான், தொடரும் உள்ளிட்ட படங்கள் 250 கோடி வசூலை கடந்தன.

ஆனால், ஹிருதயப்பூர்வம் திரைப்படம் 100 கோடி அளவுக்குத்தான் வசூல் ஈட்டியது. அதற்கு போட்டியாக துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் 300 கோடி வசூல் ஈட்டிய நிலையில், அதனை முறியடிக்கும் விதமாக மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படத்தின் பிசினஸ் சூடு பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
350 கோடி பிசினஸ்: ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் மற்றும் த்ரிஷ்யம் 2 படங்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்றன. தமிழில் பாபநாசம் என த்ரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு கமல்ஹாசன் நடித்தார். தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் இந்தியில் அஜய் தேவ்கன் உள்ளிட்டோரும் 2 பாகங்களை ரீமேக் செய்து நடித்துள்ளனர். 3வது பாகத்தை இந்தியில் முதலில் ரிலீஸ் செய்யப் போவதாகவும் சர்ச்சைகள் வெடித்த நிலையில், ஜித்து ஜோசப் மலையாள வெர்ஷனை முடித்து 350 கோடிக்கு ப்ரீ பிசினஸ் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த கட்டத்திற்கு செல்லும் மலையாள சினிமா: போட்டிப் போட்டு முன்னேறும் முனைப்பில் மலையாள சினிமாவை அடுத்த கட்டத்துக்கு மோகன்லால் எடுத்துச் செல்ல முயற்சித்து வருகிறார். த்ரிஷ்யம் 1 மற்றும் 2 பாகங்கள் ஏற்கனவே உலகளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில், 3ம் பாகம் மிகப்பெரிய வசூல் வேட்டையை அள்ளும் என்கிற முடிவில் அந்த படத்திற்கான பிசினஸ் தீவிரமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மம்மூட்டியுடன் இணைந்து: அடுத்ததாக மம்மூட்டியுடன் இணைந்து பேட்ரியாட் என்கிற படத்திலும் மோகன்லால் நடிக்கவுள்ளார். சமீபத்தில், அந்த செட்டுக்கு வந்த மோகன்லாலை மம்மூட்டி ஆரத்தழுவி வரவேற்ற காட்சிகளும் வைரலாகின. ஜெயிலர் 2 படத்திலும் மோகன்லால் முதல் பாகத்தை விட தரமான சம்பவத்தை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











