Empuraan Box Office: எம்புரான் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?.. மலையாள திரையுலகில் இதுதான் அதிகம்!
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக பிருத்விராஜ் சுகுமாரன் நடித்து வெளியான ஆடு ஜீவிதம் படம் அதிகபட்சமாக 8.95 கோடி ரூபாய் முதல் நாளில் இந்தியா முழுவதும் வசூல் செய்தது தான் இதுவரை அதிகபட்சம் என்கின்றனர். லூசிஃபர் திரைப்படம் முதல் நாளில் 6.10 கோடி ரூபாய் வசூலை கடந்த 2019ம் ஆண்டு முதல் நாள் வசூலாக அள்ளியது.
இந்நிலையில், அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடித்து புதிய சாதனையை எல் 2 எம்புரான் திரைப்படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபீஸில் சாதித்துக் காட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

லைகா நிறுவனம் தொடர்ந்து வசூல் ரீதியாக வெற்றி பெறாமல் இருந்து வந்த நிலையில், எம்புரான் படம் லைகா நிறுவனத்தை காப்பாற்றிவிடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்த எம்புரான் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
எம்புரான் முதல் நாள் வசூல்: 2019ம் ஆண்டு ஸ்டீபன் நெடும்பள்ளியாக மோகன்லால் நடித்த லூசிஃபர் திரைப்படம் மலையாள திரையுலகில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக மாறியது. அந்த படத்தின் 2ம் பாகமாக உருவாகியுள்ள எம்புரான் படம் திட்டமிட்டபடி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தின் மேக்கிங்கை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். ஆனால், கதை இன்னமும் அழுத்தமாக இருந்திருக்கலாம் என்கிற விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளில் இந்தியளவில் இந்த படம் 22 கோடி ரூபாய் வசூலை ஈட்டி முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளதாக Sacnilk இணையதளம் பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை அறிவித்துள்ளது.
உலகளவில் எத்தனை கோடி வசூல்?: மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியரின் மிரட்டலான நடிப்பில் அரசியல், போதை ஒழிப்பு, பழிவாங்கல் உள்ளிட்ட கதைகளை உள்ளடக்கமாக கொண்டு உருவான எம்புரான் திரைப்படம் உலகளவில் அதிகபட்சமாக 54 முதல் 60 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
மஞ்சுமெல் பாய்ஸ் வசூலை முந்துமா?: கேரளாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலை மஞ்சுமெல் பாய்ஸ் படம் தான் அள்ளியிருப்பதாக கூறுகின்றனர். 230 கோடி வரை அந்த படம் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், அதன் வசூலை எம்புரான் திரைப்படம் முறியடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். முதல் வாரம் முழுவதுமே ஏற்கனவே டிக்கெட் புக்கிங் பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் ஆன நிலையில், பெரிய வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் நேற்று காலை முதல் எம்புரான் படம் தான் கல்லா கட்டியது. மாலைக்கு மேல் வீர தீர சூரன் வெளியான பின்னர் தான் எம்புரான் வசூல் டல் அடிக்க ஆரம்பித்தது என்கின்றனர்.
மோகன்லாலுக்கு இண்டஸ்ட்ரி ஹிட் கிடைக்குமா?: கடந்த சில ஆண்டுகளாகவே மோகன்லால் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படங்கள் எல்லாமே சொதப்பி வந்த நிலையில், பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள எம்புரான் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. ஆனால், விமர்சனங்களை தாண்டி சலார் படத்தை போல இந்த படமும் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: சினிமா படங்களின் வசூல் குறித்த தகவல்கள் பாக்ஸ் ஆபீஸ் தளமான Sacnilk போன்றவற்றில் இருந்தே எடுக்கப்படுகின்றன. இந்த பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டால் அந்த தகவல்கள்களும் இங்கே பகிரப்படும்.


Click it and Unblock the Notifications











