Empuraan OTT: சென்சார் போர்டையே கதிகலங்க வைத்த மோகன்லாலின் எம்புரான்.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: மலையாள சினிமாவின் மெகா பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக மாறிய படம் எம்புரான். பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டெவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்து கடந்த மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் ஆன படம். இந்த படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல் நடிக்கவும் செய்திருந்தார் பிருத்விராஜ். மேலும் இந்த படம் ஏற்கனவே வெளியான லூசிஃபர் படத்தின் இரண்டாவது பாகம்தான். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோகன் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் லூசிஃபர். அரசியல் தளத்தை கதைக்களமாக கொண்டிருந்தாலும் இந்த படம் மையப்படுத்தி எடுக்கப்பட்ட அரசியல் என்பது தமிழ்நாடு அரசியல் சூழலுக்கு கொஞ்சம் நெருக்கமாகவும் இருந்தது. படம் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது மட்டும் இல்லாமல், இரண்டாம் பாகம் கட்டாயம் உள்ளது என படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இப்படியான நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸுக்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் ரூபாய் 50 கோடிகள் வசூலித்தது. மலையாளத் திரையுலக வரலாற்றில் படம் ரிலீஸ்க்கு முந்தைய டிக்கெட் புக்கிங்கில் ரூபாய் 50 கோடிகளை வசூல் செய்த படம் என்றால் அது லுசிஃபர் இரண்டாம் பாகம் தான். படம் நேரடி மலையாளப் படம் என்றாலும் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றதால் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை அள்ளியது.
இந்துத்துவ எதிர்ப்பு: படம் வெளியாகி சில தினங்களில் தொடங்கியது பிரச்னை. அதாவது படத்தின் பிரதான வில்லன் பெயர் பாபா பஜ்ரங்கி என இருந்ததாலும், படம் இந்துத்துவ அரசியலை காட்டமாக விமர்சித்து காட்சிகளைக் கொண்டிருந்ததாலும், இந்துத்துவ அமைப்புகளிடம் இருந்து படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. எம்புரான் படம் குறித்து கேரளாவைச் சேர்ந்த பாஜக எம்.பியும் நடிகருமான சுரேஷ் கோபி பாராளுமன்றத்தில் கூட கண்டன உரையாற்றினார்.

சென்சார் போர்டு: அதன் பின்னர் படத்தை மீண்டும் சென்சார் செய்து வெளியிட்டார்கள். படத்தை மீண்டும் சென்சார் செய்தபோது, சென்சார் தரப்பில் இருந்து படத்தின் தொடக்கத்தில் வரும் இஸ்லாமியர்களை படுகொலை செய்யும் கலவரக் காட்சிகள் உள்ளிட்ட மொத்தம் 17 காட்சிகள் நீக்கப்பட்டது. இது படத்திற்கு கொஞ்சம் பின்னடைவை கொடுத்தது. ஆனாலும் இந்த மறு சென்சாரால் படத்தின் வசூலுக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ஓடிடி: குறிப்பாக படம் தியேட்டரில் மட்டும் ரூபாய் 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இதன் மூலம் மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதாவது படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. தியேட்டரில் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் ஓடிடி தளத்தில் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த படத்திற்கு மூன்றாம் பாககும் உருவாகவுள்ளது.
படம் எப்படி இருக்கு: இந்தியாவின் மதச்சார்பின்மை ஜனநாயகத்தை அரசியல் ஆதாயத்துக்காக அழிக்க நினைக்கும் அரசியல் செயல்பாடுகளை நேரடிக் காட்சிகளாகவும் குறியீடுகளாகவும் கொண்ட மாஸ் என்டர்டெயினர் திரைக்கதை கொண்ட படம் என படம் பார்த்த ரசிகர்கள் தொடங்கி, விமர்சகர்கள் வரை அனைவரும் பாராட்டினர். மோகன்லாலுக்கு ரசிகர்கள் நினைத்ததைப்போல் பல மாஸான காட்சிகளை வைத்து அவரது ரசிகர்களை குஷிபடுத்திவிட்டார் இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன். படம் ரசிகர்கள் தரப்பில் பாராட்டப்பட்டாலும், படத்தை பான் இந்தியா அளவில் கொண்டாடவேண்டும், பான் இந்தியா அளவுக்கு வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோருக்கான மாஸான காட்சிகள், வழக்கமான மசாலா படங்களைப் போல அமைத்திருந்தது, வழக்கமான கேரளா படங்களில் இருந்து மொத்தமாக விலகி இருக்கிறது எனவும் ரசிகர்கள் பலர் விமர்சித்தார்கள்.
வசூல் விபரம்: படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப் படமாக மாறும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் படம் கே.ஜி.எஃப் படத்தின் வசூலை விடவும் அதிக அளவில் வசூலிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுவும், படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 காட்சிகள் நீக்கப்பட்ட பின்னரும் படத்தின் வசூல் என்பது சீராக இருந்தது. படம் வெளியாகி மூன்றாவது நாளில் படத்தை மறு சென்சார் செய்தனர். அதன் பின்னரும் படம் முதல் மூன்று நாட்களில் ரூபாய் 100 கோடிகளை அள்ளியது. இது மட்டும் இல்லாமல் முதல் வாரம் முடிந்து இரண்டாவது வார தொடக்கத்தில் படம் ரூபாய் 200 கோடிகளை அள்ளியது. படம் திரையரங்கில் மட்டும் ரூபாய் 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இது மலையாள சினிமாவில் அதிக வசூலை குவித்த படமாக மாறியது. மேலும் கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தின் மொத்த வசூலான ரூபாய் 240 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
மூன்றாவது பாகம்: 2019ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிர்புதிரியான ஆதரவு கிடைத்தது. மேலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டாம் பாகம் 2020ஆம் ஆண்டே வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தனர். மொத்த படக்குழுவும் அதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். ஆனால் கொரோனா பரவாலால் மொத்த உலகமுமே முடங்கியதால், இந்த படத்திறகான பணிகளை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது. ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு மத்தியில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் ப்ரோ டாடி படத்தில் நடித்தார். அந்த படத்தில் பிரித்விராஜும் நடித்திருந்தார்.
அதன் பின்னர்தான் எம்புரான் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆன பின்னர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இல்லாமல், படக்குழு தரப்பில் இருந்து மூன்றாவது பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியிலும் உள்ளனர். மூன்றாவது பாகம் அடுத்த ஆண்டோ அல்லது 2027ஆம் ஆண்டோ ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











