மஞ்சுமெல் பாய்ஸ் வசூலை முறியடித்த எம்புரான்.. மலையாளத்தின் ஆல் டைம் இண்டஸ்ட்ரி ஹிட் இதுதான்!
திருவனந்தபுரம்: மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் யாருமே எதிர்பார்த்த அளவுக்கு 242 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மலையாள திரை உலகின் ஆல் டைம் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக மாறியது.
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அந்த திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றது. 72 நாட்கள் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் சிறுக சிறுக ஈட்டிய வசூலை மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான எம்புரான் திரைப்படம் 10 நாட்களில் முறியடித்துள்ளது.

பிருத்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் நடித்த எல்2 எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தமிழ்நாட்டில் எதிர்ப்பு: வட இந்தியாவில் இந்து மதத்தினரை தீவிரவாதிகளாக படத்தில் சித்தரித்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பிய நிலையில், எம்புரான் படத்திற்கு அதிகபட்சமாக 24 கட்கள் கிடைத்தன. நாடாளுமன்றத்தில் சுரேஷ் கோபி எம்புரான் படத்துக்கு எதிராக கடுமையாக வாதாடினார். முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சிகளுக்காக தமிழ்நாட்டிலும் அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு உருவாகியுள்ளது. யூடியூபர் இர்பான் மோகன்லாலை பேட்டி எடுத்த நிலையில், அவரையும் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

மலையாளத்திலேயே அதிக வசூல்: மலையாள திரை உலகில் முதன்முறையாக 200 கோடி ரூபாய் வசூலை கடந்த படமாக மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கடந்த ஆண்டு மாறியது. தமிழ்நாட்டில் அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவுக்கு வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில், அந்த படத்தின் வசூல் சாதனையை 10 நாட்களுக்குள் மோகன்லால் எம்புரான் திரைப்படம் முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
250 கோடி வசூல்: பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் கேரளா அரசியல், மதவாத அரசியல், போதை பொருள் கடத்தல், முல்லைப் பெரியாறு பிரச்சனை என பல விஷயங்களை உள்ளடக்கி உருவான நிலையில், இதுவரை 245 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் 250 கோடி வசூல் சாதனையை அந்த படம் படைக்கும் என்கின்றனர். நிறைய காட்சிகள் நீக்கப்பட்ட நிலையிலும், கேரள ரசிகர்கள் மோகன்லாலின் எம்புரான் திரைப்படத்தை பார்க்க ஆர்வம் செலுத்தி வருவதால் தான் இந்த அளவுக்கு வசூல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் லூசிபர் மூன்றாம் பாகம் விரைவில் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
லாலேட்டன் மாஸ்: பிருத்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான எம்புரான் திரைப்படம் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு மலையாளத் திரை உலகின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாக எம்புரான் திரைப்படம் மாறி உள்ளது. அதே நேரத்தில், படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர் பிருத்திவிராஜ் உள்ளிட்டோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என மோகன்லால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெற்றிக்குப் பிறகு அந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் பல்வேறு சோதனைகள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











