வெள்ளி விழா நாயகனுக்கு வெற்றி கிடைக்குமா?.. இந்த வாரம் மோகன் படத்துடன் இத்தனை படங்கள் மோதுதா?
சென்னை: தமிழ் சினிமாவில் இந்த வாரம் மூன்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதுகின்றன. வெள்ளிவிழா நாயகன் என கொண்டாடப்பட்ட நடிகர் மோகன் நடித்துள்ள ஹரா திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது.
அந்த படத்துடன் போட்டியாக மேலும் சில தமிழ் படங்களும் இந்த வாரம் வெளியாகின்றன. ரீ ரிலீஸ் படங்கள் இந்த ஆண்டு தேர்தல்களில் முதல் நாளில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டையும் நடத்தியது.
இந்நிலையில், அப்படியொரு தரமான ரீ ரிலீஸ் திரைப்படமும் இந்த வாரம் வெளியாகிறது. நடிகர் மோகன் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஹீரோவாக நடித்துள்ள ஹரா திரைப்படத்துக்கு போட்டியாக இந்த வாரம் எந்த எந்த படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து இங்கே காணலாம்.
ஹரா: விஜய் ஶ்ரீ இயக்கத்தில் வெள்ளி விழா நாயகன் மோகன், அனுமோல், வனிதா விஜயகுமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஹரா திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அந்தப் படத்திற்காக தொடர்ந்து விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மற்றும் ஏகப்பட்ட யூடியூப் சேனல்களில் பேட்டிக் கொடுத்து புரமோட் செய்து வருகிறார் மோகன். ஹரா படத்தை தொடர்ந்து விஜய்யுடன் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் ரசிகர்களும் மோகன் படத்துக்கு ஆதரவு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன்: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதத்திலிருந்து ஜூலை மாதத்துக்கு ரிலீஸ் தேதி தள்ளிப் போன நிலையில், 28 ஆண்டுகள் முன்னதாக வெளியான இந்தியன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. கில்லி படத்துக்கு கிடைத்த அளவுக்கு வரவேற்பு இந்த படத்துக்கு கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

வெப்பன்: குகன் சேனை ஐயப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, தன்யா ஹோப், யாஷிகா ஆனந்த், கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள வெப்பன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்காக நடிகர் சத்யராஜ் ஏகப்பட்ட புரமோஷன்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அஞ்சாமை: இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் விதார்த், ரகுமான் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள அஞ்சாமை திரைப்படம் நாளை வெளியாகிறது. சோஷியல் கிரைம் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. நடிகர் ரகுமான் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இறுகப் பற்று படத்தை தயாரித்த எஸ்.ஆர். பிரபு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

பேட் பாய்ஸ் - ரைடு ஆர் டை: கூடுதலாக இந்த வாரம் ஹாலிவுட் ரசிகர்களுக்கான படமாக வில் ஸ்மித் நடித்துள்ள பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை படமும் நாளை வெளியாகிறது. பல படங்கள் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் ரசிகர்களை கவர்கிறது என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications











