பீரியட்ஸ் நேரத்தில் பரீட்சை எழுதக் கூடாதா?.. ட்ரோலாகும் மோகன் நடித்த ‘ஹரா’ படக் காட்சி!
சென்னை: விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன் நடித்து வெளியான 'ஹரா' திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியை ஷேர் செய்து தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகர் மோகன் எப்படி இதுபோன்ற காட்சிகளில் நடிக்க சம்மதித்து அந்த வசனங்களை பேசலாம் என விளாசி வருகின்றனர்.
இந்த மாதம் ஜூன் 7ம் தேதி இப்படியொரு படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் உள்ள நிலையில், வெள்ளி விழா நாயகனை சோஷியல் மீடியாவில் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.

மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கையாகவே வரும் ஒரு விஷயம் தான். அதை கடந்து எத்தனையோ பெண்கள் அந்த நேரத்திலும் பல சாதனைகளை சர்வ சாதாரணமாக படைத்து வருகின்றனர். இந்நிலையில், இப்படியொரு மடத்தனமான காட்சியையும் வசனத்தையும் எப்படி வைக்கலாம் என ஹரா படத்தின் காட்சியை ட்ரோல் செய்து வருகின்றனர்.
ராமராஜனை தொடர்ந்து மோகன்: இந்த வயதிலும் ஹீரோவாக நடிக்க நடிகர் மோகனுக்கு பல வருடங்கள் கழித்து வாய்ப்பு வந்த நிலையில், ஹரா படத்தில் ஹீரோவாக நடித்தார். கடந்த 7ம் தேதி வெளியான ஹரா திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் குவிந்தன. வெள்ளி விழா நாயகன் என கொண்டாடப்பட்ட மோகனுக்கா இப்படியொரு நிலை என அவரது ரசிகர்கள் அப்செட் ஆகி விட்டனர்.
பீரியட்ஸ் நேரத்தில் பரீட்சை எழுதக் கூடாதா?: ஹரா படத்தில் தனது மகளை மோகன் எந்தளவுக்கு பாசத்துடன் வளர்க்கிறார் என்பதை காட்டுவதற்காக அபத்தமான காட்சி ஒன்றை இயக்குநர் விஜய் ஸ்ரீ வைத்திருப்பதாக நெட்டிசன்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். பீரியட்ஸ் நேரத்தில் பள்ளி தேர்வை தனது மகள் எழுத அனுமதிக்க மாட்டேன் என்றும் அதற்கு ஆசிரியர் வீட்டிலேயே எழுத வழி வகை செய்கிறோம் என்பதற்கும், ஒரு வருஷம் வீணா போனா போகட்டும் சார் கொரோனா காலத்துல எல்லாரும் 2 வருஷம் வீட்டில் தான் முடங்கிக் கிடந்தனர் என மோகன் பேசும் வசனம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
கிளம்பிய விவாதம்: சில இயக்குநர்கள் சினிமா எடுப்பதே இதுபொன்ற பிற்போக்குத்தனங்களை மக்கள் மத்தியில் விதைக்கத்தான் எடுத்து வருகின்றனர் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். நடிகர் மோகன்பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இப்படியொரு காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என மறுத்திருக்கலாமே என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், அந்த மாதிரியான நேரத்தில் பெண்களுக்கு கட்டாயம் ஓய்வு தேவை என்றும் சில நாடுகளில் மாதவிடாய் காலங்களில் விடுப்பு அளித்து வருவதை தான் குறிப்பிடுகிறது அந்த காட்சி என்றும் ஆதரவு கருத்துக்களும் கிளம்பி உள்ளன.



Click it and Unblock the Notifications











