AR Rahman: எரியுற தீயில் எண்ணெய் ஊற்ற நான் வரல.. ஏ.ஆர் விவாகரத்து சர்ச்சை குறித்து மோகினி ஓபன்!
சென்னை: கடந்த சில நாட்களாகவே இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள விஷயம் என்றால் அது, ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து விஷயம் தான். இதுமட்டும் இல்லாமல், இவரது, இசைக் குழுவில் பேஸ் கிட்டாரிஸ்ட்டாக இருக்கக்கூடிய இசைக் கலைஞர் மோகினி தேவும் அடுத்த நாளில் தனது விவாகரத்தினை அறிவித்ததால், பலரும் இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து அவதூறு கருத்துகளைப் பகிரத் தொடங்கினர். இது ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களை மட்டும் இல்லாமல் அவரது குடும்பத்தினரையும் பெரும் கவலைக்குள் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மோகினி தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இந்திய சினிமாவின் அடையாளமாக உலக அரங்கில் திகழ்கின்றார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றார். அண்மையில் கூட இவர் இசை அமைத்த ஆடு ஜீவிதம் படத்துக்காக ஹாலிவுட் மியூசிக் அண்ட் மீடியா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்னணி இசைக்காக வழங்கப்படும் இந்த ஹாலிவுட் விருதினைப் பெறும் முதல் இந்தியர் இவர்தான். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த விருது குறித்த அறிவிப்பு, ரஹ்மான் தனது விவாகரத்து கூறித்து அறிவித்த பின், சில நாட்கள் கழித்து வெளியானது.

விவாகரத்து: ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் காதல் மற்றும் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணம். கடந்த 29 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த இந்த தம்பதியர் சில நாட்களுக்கு முன் தாங்கள் பிரிவதாக அறிவித்தனர். இதுமட்டும், இல்லாமல் இவர்களுக்கு ரஹீமா ரஹ்மான், கதிஜா ரஹ்மான், அமீன் என இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மூவருமே பெரியவர்களாக வளர்ந்துவிட்ட நிலையில், ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தங்கள் விவாகரத்தை அறிவித்தது பலரையும் கலங்கச் செய்தது.
சர்ச்சை: இவர் தனது விவாகரத்தினை அறிவித்த அடுத்த நாளில், அவரது இசைக்குழுவில் பேஸ் கிட்டாரிஸ்ட்டாக இருந்த மோகினி தே தனது கணவரைப் பிரிவதாக அறிவிக்க, இணையவாசிகள் இவர்கள் இருவருக்கும் முடிச்சு போட ஆரம்பித்தனர். இது இணையத்தில் ட்ரெண்ட் ஆக, ரஹ்மானின் மகள் ரஹீமா ரஹ்மான் மற்றும் மகன் அமீன் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
மோகினி தே: இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மோகினி தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, “ என்னை நேர்காணல் எடுக்க கோரிக்கைகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் என்ன காரணம் என எனக்கு நன்றாகவே தெரியும். நான் எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்ற விரும்பவில்லை. என்னை நேர்காணல் எடுப்பதற்காக அனுகியவர்கள் அனைவரிடமும் முடியாது எனக் கூறிவிட்டேன். வதந்திகளுக்கு பதில் அளித்துக் கொண்டு அதன் பின்னால் ஓடி எனது, சக்தியையும் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. எனது தனியுரிமையும் சுதந்திரத்தையும் மதிக்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.




Click it and Unblock the Notifications











