'உங்களால்தான் கனவு காண ஆரம்பித்தேன், அப்பா..' பிரபல பாடகியின் தந்தை மரணம்.. டச்சிங் போஸ்ட்!
மும்பை: பிரபல பாடகி தனது தந்தை மரணமடைந்ததை அடுத்து டச்சிங்கான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல பின்னணி பாடகி மோனாலி தாகூர். பல்வேறு மொழிகளில் பாடல் பாடியுள்ளார். நடிகையாகவும் இருக்கிறார்.
இசைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பரதநாட்டியம், சல்சா நடனங்களை முறைப்படி கற்றவர்.

மதயானைக் கூட்டம்
தமிழில், ரகுநந்தன் இசையில், மதயானைக் கூட்டம் படத்தில், யாரோ யாரோ என்ற பாடலை பாடியுள்ளார். ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு நடித்த, 60 வயது மாநிறம் படத்தில், இளையராஜா இசையில், நாளும் நாளும் என்ற பாடலையும் பாடியிருக்கிறார். ஆமிர்கானின் பிகே, லட்சுமி உட்பட சில இந்திப் படங்களில் நடித்துள்ளார்.

பிரபல பாடகி
ஏராளமான பெங்காலி மற்றும் இந்திப் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இந்தி டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ள இவர், தனி இசை ஆல்பங்களிலும் பாடல் பாடியுள்ளார். தொடர்ந்து படங்களில் பாடி வருகிறார். இவர் சகோதரி மெஹூலியும் பெங்காலியில் பிரபல பாடகியாக இருக்கிறார்.

ரகசிய திருமணம்
மோனாலி, தனது வெளிநாட்டு காதலரை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டேன் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். 'ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த மைக் ரிச்டரை சில வருடங்களாகக் காதலித்து வந்தேன். அங்கு ரெஸ்டாரன்ட் வைத்திருக்கிறார் மைக். 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம்.

சக்தி தாகூர்
இது வழக்கமான திருமணம் இல்லை என்பதால், அதை ரகசியமாக வைத்திருந்தோம். இப்போது வெளிப்படுத்தி விட்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், மோனாலியின் தந்தை சக்தி தாகூர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். சக்தி தாகூர், பிரபல பெங்காலி நடிகர் மற்றும் பாடகர். அவருக்கு வயது 73.

டச்சிங்கான பதிவு
தனது தந்தையின் மறைவை அடுத்து டச்சிங்கான பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார் மோனாலி. அதில், எனது சிறந்த விமர்சகர், ஆசிரியர். அவர் பணிவு, வாழ்நாள் முழுவதும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கும் விஷயம். உங்களால்தான் நான் கனவு காண ஆரம்பித்தேன். இப்போது மனம் உடைந்தாலும் உங்கள் பெருமைக்குரிய மகளாக இருக்கிறேன்.

நேசிக்க மாட்டார்கள்
தொடர்ந்து உங்கள் வழியை பின்பற்றி அன்பை பரப்புவேன். என்னை நீங்கள் நேசித்த அளவு இந்த உலகில் வேறு யாரும், என்னை நேசிக்க மாட்டார்கள் என்பது தெரியும் என்று ஆரம்பித்து நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். இதையடுத்து பெங்காலி திரையுலகினரும் ரசிகர்களும் அவர் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











