தீபாவளிக்கு ரிலீஸ்.. ஓடிடி-யில் வெளியாகிறது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்.. பரபரக்கும் தகவல்!
சென்னை: நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம், ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் காரணமாக, சினிமா துறை மொத்தமாக முடங்கி கிடக்கிறது. உலகம் முழுவதுமே இந்த நிலைதான்.
இந்திய சினிமா துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு ரெடியாக இருந்த பல படங்கள், திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொன்மகள் வந்தாள்
இதனால், சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்து வருகின்றன. நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் அமேசானில் வெளியானபோது தியேட்டர் அதிபர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். பிறகு இந்தப் பிரச்னை அமைதியானது.

சூரரைப் போற்று
இதையடுத்து கீர்த்தி சுரேஷின் பெண்குயின், அனுஷ்காவின் சைலன்ஸ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் உள்பட பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாயின. அடுத்து நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. ஓடிடியில் வெளியாகும் பெரிய ஹீரோ படம் இதுதான்.

நடிகை நயன்தாரா
இதற்கும் தியேட்டர் அதிபர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படமும் ஓடிடி தளத்தில் வெளியாக போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காமெடி வேடங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, இதில் ஹீரோவாக நடித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன்
இந்தப் படத்தை என்ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜியும் இயக்கி உள்ளார். இதில், நயன்தாரா, மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார். மவுலி, ஊர்வசி, மேயாத மான் இந்துஜா உட்பட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ், ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார்.

சாமி படம்தான்
இந்தப் படத்துக்காக, அம்மன் தோற்றத்தில் இருக்கும் நயன்தாராவின் லுக் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துக்காக அவர் விரதம் இருந்து நடித்தார் என்று முன்பு செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தப் படம், நூறு சதவிகிதம் சாமி படம்தான் என்று தெரிவித்து இருந்தார் ஆர்.ஜே.பாலாஜி.

ஐபிஎல் வர்ணனை
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் வர்ணனை செய்துகொண்டிருந்த ஆர்.ஜே.பாலாஜி இன்னும் 20 நாள் வர்ணனையில் இருக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். மூக்குத்தி அம்மன் பட புரமோஷனுக்கு செல்ல இருப்பதால் கமென்ட்ரி பண்ண வரமாட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், மூக்குத்தி அம்மன் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தீபாவளிக்கு ரிலீஸ்
இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், ஹாட்ஸ்டாருக்கு படத்தை விற்று விட்டதாகவும், வரும் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











