ஆணாதிக்கம் மிகுந்த சினிமாவில்.. 'மூக்குத்தி அம்மன்' நயன்தாராவை அப்படிப் புகழும் ஆர்ஜே பாலாஜி!
சென்னை: மூக்குத்தி அம்மன் படம், தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் ஆகும் என்றும் ஓ.டி.டி-யில் வெளியாகாது என்றும் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.
காமெடி வேடங்களில் நடித்துவந்த ஆர்ஜே பாலாஜி, 'எல்கேஜி' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
ஐசரி கணேஷ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், நாஞ்சித் சம்பத், மறைந்த ஜே.கே.ரித்திஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.

மூக்குத்தி அம்மன்
இதையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படம், மூக்குத்தி அம்மன். இதை என்ஜே.சரவணனுடன் இணைந்து அவரும் இயக்குகிறார். மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார், நயன்தாரா. மவுலி, ஊர்வசி, மேயாத மான் இந்துஜா உட்பட பலர் நடிக்கின்றனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

முக்கியமான படம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்துள்ளது. படத்துக்காக, நயன்தாரா விரதம் இருந்து நடித்தார். அவரது அர்ப்பணிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது என்று ஆர்ஜே பாலாஜி கூறியிருந்தார். 'அம்மன் கேரக்டரில் நடிப்பதற்காக, முழு உழைப்பையும் கொடுத்து இருக்கிறார் நயன்தாரா. இது, அவர் சினிமா வாழ்வில், முக்கியமான படமாக இருக்கும்' என்றும் கூறியிருந்தார்.

சாமி படம்தான்
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி டிரெண்டானது. அம்மன் தோற்றத்தில் இருக்கும் நயன்தாராவின் லுக்கை கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அதற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்நிலையில், இது நூறு சதவிகித சாமி படம்தான் என்று தெரிவித்து இருந்தார், பாலாஜி.

லாக்டவுனுக்கு பிறகு
அவர் கூறும்போது, இது நையாண்டி படம் அல்ல. நாம் சின்ன வயதில் பார்த்த, சாமி படங்களின் அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும்' என்று தெரிவித்திருந்தார். லாக்டவுன் காரணமாக மற்றப் படங்களை போல இதன் ரிலீஸும் தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் லாக்டவுனுக்குப் பிறகு வெளியாகும் முதல் படமாக மூக்குத்தி அம்மன் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் பாலாஜி.
Recommended Video

ஆணாதிக்கம்
'இந்தப் படம் ஓ.டி.டி-யில் வெளியாகாது என்றும் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் ஆகும் என்றும் கூறியுள்ள அவர், நடிகை நயன்தாராவை புகழ்ந்துள்ளார். 'அவர் ஒழுக்கமான நடிகை. அதனால்தான் ஆணாதிக்கம் மிகுந்த இந்த சினிமாதுறையில் முக்கியமான நடிகையாக இருக்கிறார்' என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் உரிமையை வாங்க சில நிறுவனங்கள் போட்டிப் போடுவதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











