தீபாவளிக்கு இவ்வளவு படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகுதா.. அடேங்கப்பா!
சென்னை : எப்போதுமே தீபாவளிப் பண்டிகை ஓளியைக் கூட்டும் பண்டிகையாக இந்திய அளவில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை காட்டிலும் தீபாவளிக்கே முன்னணி நடிகர்களின் படங்கள் அதிகமாக வெளியாகும்.
இந்த ஆண்டு தமிழில் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகவில்லை என்றபோதிலும் கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்கள் வெளியாகவுள்ளது ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது.

தீபங்களின் திருவிழா
தீபங்களின் திருவிழாவான தீபாவளி இன்னும் சில தினங்களில் கொண்டாடப்படவுள்ளது. அதற்காக மக்கள் புத்தாடை, இனிப்புகள் என தங்களது இல்லங்களை நிறைத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக தீபாவளியைக் கொண்டாடிவிட்டு திரையங்குகளுக்கு படையெடுக்கும் மனோபாவம் ரசிகர்களிடையே காணப்படுகிறது.

விஜய், அஜித் படங்கள் ரிலீஸ் இல்லை
அவர்களின் இந்த மனநிலைக்கு தீனிபோடும் வகையில் விஜய், அஜித், ரஜினி உள்ளிட்டவர்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியாகி வழக்கமாக அவர்களை உற்சாகப்படுத்தும். ஆனால் இந்த தீபாவளிக்கு இவர்களின் படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. இவர்கள் படங்கள் படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

களத்தில் சிவகார்த்திகேயன், கார்த்தி
விஜய், அஜித்தின் படங்கள் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களது ரசிகர்கள் இந்த தீபாவளிப் பண்டிகையில் ஏமாற்றமடைதுள்ளனர். ஆனாலும் இவர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்ய சிவகார்த்திகேயன், கார்த்தி களமிறங்கியுள்ளனர்.

நாளை ரிலீசாகும் பிரின்ஸ், சர்தார்
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் படங்கள் தீபாவளியையொட்டி நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளன. இதையொட்டி சிறப்பான பிரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து படம்குறித்த அடுத்தடுத்த பேட்டிகளை படக்குழுவினர் அளித்து வருகின்றனர்.

மலையாளத்தில் மோகன்லால் படம்
இதனிடையே தீபாவளிக்கு இந்த இரு படங்கள் தமிழில் வெளியாகவுள்ள நிலையில், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மான்ஸ்டர் மற்றும் நிவின் பாலியின் படவேட்டு ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இந்தப் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தமிழகத்திலும் ரிலீசாக உள்ளன.

விஷ்ணு மஞ்சுவின் ஜின்னா
தெலுங்கில் விஷ்ணு மஞ்சு நடிப்பில் ஜின்னா மற்றும் வெங்கடேஷ் நடிப்பில் ஓரி தேவுடா ஆகிய படங்கள் நாளைய தினம் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளன. இதில் ஜின்னா படத்திற்கு பிரபல தெலுங்குப்பட நடிகர் பிரபாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜின்னா படத்தில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

பாலிவுட், ஹாலிவுட் படங்களும் ரிலீஸ்
பாலிவுட்டில் தேங்க் காட் மற்றும் ராம் சேது ஆகிய படங்கள் தீபாவளியையொட்டி நாளைய தினம் வெளியாகவுள்ளன. இதேபோல ஹாலிவுட்டில் பிளாக் ஆடம் மற்றும் டிக்கெட் டு பேரடைஸ் ஆகிய படங்களும் கொரியனில் ஹெட் பஷ் படமும் ரிலீசாகவுள்ளன. முன்னணி ஹீரோக்கள் கைவிட்டாலும் இவ்வளவு படங்கள் இந்த தீபாவளியை சிறப்பாக்க ரிலீசாக உள்ளன.


Click it and Unblock the Notifications











