2026ல ரெண்டே பேருக்கு நடுவே தான் போட்டியே.. ஒண்ணு ஜன நாயகன்.. இன்னொன்னு ஜெயிலர் 2.. டாப் லிஸ்ட் இதோ!
சென்னை: 2025ம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் விஜய்யின் ஜன நாயகன் இருந்தது. ஆனால், கடைசியாக 2026ம் ஆண்டு பொங்கலுக்கு அந்த படம் தள்ளிப்போனது. இந்த ஆண்டு இன்றுடன் முடிகிற நிலையில், அடுத்த ஆண்டு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம் வாங்க..
2025ம் ஆண்டு ரஜினிகாந்தின் கூலி, அஜித் குமாரின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, கமல்ஹாசனின் தக் லைஃப், சூர்யாவின் ரெட்ரோ, சிவகார்த்திகேயனின் மதராஸி, தனுஷின் குபேரா மற்றும் இட்லி கடை உள்ளிட்ட படங்கள் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டன.

முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு ரசிகர்களை எந்தளவுக்கு வச்சி செய்தது என்பதை நல்லாவே தியேட்டருக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கெட்டுகளை அடித்துப் பிடித்து வாங்கிப் பார்த்த ரசிகர்கள் அனுபவித்து இருப்பார்கள். சில படங்களை ஓடிடியில் கூட பார்க்க முடியாத நிலையே இருந்தது நிதர்சனம். இந்நிலையில், 2026ல் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பட்டியலை பார்த்து விடுவோம் வாருங்கள்..
ஜன நாயகன்: அ. வினோத் இயக்கத்தில் தளபதி விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படும் 'ஜன நாயகன்' வரும் ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பகவந்த் கேசரி ரீமேக் தான் இந்த படம் என பல தகவல்கள் வெளியானாலும், அடுத்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலை ஜன நாயகன் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள் வசூல் சுமார் 150 கோடி வரும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன.

ஜெயிலர் 2: விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய போட்டியாக அடுத்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தில் அமீர்கான் நடித்த நிலையில், ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, எஸ்ஜே சூர்யா என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி படமாக ஜெயிலர் 2 மாறுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

பராசக்தி: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2026ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி ஜன நாயகன் படத்துக்குப் போட்டியாக வெளியாகும் பராசக்தி திரைப்படம் அமரன் படத்தின் வசூலை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீ பரவினால் சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் அடுத்த பாக்ஸ் ஆபீஸ் கிங்காக மாறிவிடுவார்.
டி 54: போர் தொழில் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு நடித்துள்ள டி 54 திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாக காத்திருக்கிறது. போர் தொழில் படத்தை போலவே இந்த படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பு / எல்ஐகே: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியாகி சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல இந்த ஆண்டு தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பிப்ரவரி மாதம் வெளியாகி வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகம்: இந்த டாப் 5 லிஸ்ட்டை தாண்டி அடுத்த ஆண்டு மூக்குத்தி அம்மன் 2, யஷ் நடித்துள்ள டாக்ஸிக், நானியின் பாரடைஸ், கார்த்தி நடித்துள்ள சர்தார் 2 மற்றும் மார்ஷல், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம், ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள ராமாயணம் முதல் பாகம் உள்ளிட்ட படங்களும் அடுத்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸில் பக்கா கலெக்ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு போல அடுத்த ஆண்டு எத்தனை பெரிய படங்கள் பல்பு கொடுக்கப் போகிறது என்றும் தெரியவில்லை. திடீரென சிறு பட்ஜெட் படங்கள் வந்து மிகப்பெரிய வெற்றியையும் பெறும் என்பதும் உறுதி.


Click it and Unblock the Notifications











