'ஶ்ரீகாந்த் மாதிரி அப்படியே விளையாடறியேன்னு மைக்ல சொன்னார் கவாஸ்கர்...' புல்லரிக்கிறார் '83' ஜீவா
சென்னை: நான், கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் மாதிரியே ஆடுவதாக சுனில் கவாஸ்கர் சொன்னதாக நடிகர் ஜீவா கூறினார்.
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதை மையமாக வைத்து '83' என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது.
கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில்தேவ் கேரக்டரில் நடிக்கிறார். மதன்லாலாக ஹர்டி சாந்து, கபில்தேவின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.

ஶ்ரீகாந்தாக ஜீவா
சுனில் கவாஸ்கராக தஹிர் ராஜ் பாசின், சையது கிர்மானியாக சஹில் கட்டார் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தாக ஜீவா நடிக்கிறார். இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகிறது. '83' படத்தில் ஜிவாவின் தோற்றம் நேற்று வெளியானது.

அதிரடி ஆட்டம்
இதுபற்றி ஜீவா கூறும்போது, நான் தெருவில் கிரிக்கெட் விளையாடியவன். கல்லி கிரிக்கெட் விளையாடுபவர்களை பார்த்தால், எல்லோருமே ஶ்ரீகாந்த் மாதிரிதான் அதிரடியாக ஆடுவார்கள். இந்தப் படத்துக்காக, மும்பையில் கிரிக்கெட் பயிற்சி நடத்தினார்கள்.

சென்னையில் பயிற்சி
நான் செல்லவில்லை. பல்விந்தர் சிங் சாந்து சென்னைக்கு வந்து எனக்கு பயிற்சி அளித்தார். சில நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தார். இங்கிருக்கும் எனது கிரிக்கெட் நண்பர்களும் எனக்கு ஆலோசனை சொன்னார்கள். இந்த ஆலோசனை எனக்கு உதவியது.

கேரக்டராக மாறினேன்
ஒரே நாளில் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் மாதிரி மாறவில்லை. அந்த கேரக்டராக மாறி, அதிக பயிற்சி எடுத்தேன். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஶ்ரீகாந்த் சாரை சந்தித்து பேசினேன். அவர் நிறைய விஷயங்களைச் சொன்னார்.

சுனில் கவாஸ்கர்
ஒரு நாள் படப்பிடிப்பு தளத்துக்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வந்தார். நாங்கள் எப்படி பயிற்சி எடுக்கிறோம் என்பதைக் கவனித்தார். பிறகு மைக்கில் சொன்னார், நான் ஆடுவது அப்படியே ஶ்ரீகாந்த் ஆடுவது போல இருக்கிறது என்று.

கிளைவ் லாயிட்
இதே போல குண்டப்பா விஸ்வநாத், கிளைவ் லாயிட் ஆகியோரும் நான் ஶ்ரீகாந்தை போல ஆடுவதாகச் சொன்னார்கள். இதை விட எனக்கு வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்?' என்றார்.


Click it and Unblock the Notifications











