Ameer - அமீர் காசை எடுத்திருக்கலாம்.. ஆனால் செய்யவில்லை.. மௌனம் பேசியதே தயாரிப்பாளர் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சென்னை: Ganesh Raghu Exclusive Interview (கணேஷ் ரகு பிரத்யேக பேட்டி) மௌனம் பேசியதே படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் ரகு தமிழ் ஃபில்மிபீட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத இயக்குநர் அமீர். பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு ஜீவா நடிப்பில் ராம் படத்தை தயாரித்து இயக்கினார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அமீருக்கு தனித்த அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.
ட்ரெண்ட் செட்டர் பருத்திவீரன்: மூன்றாவது படமாக பருத்திவீரனை இயக்கினார் அமீர். அந்தப் படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ட்ரெண்ட் செட்டர் படமாக அமைந்தது. அதிலும் கார்த்திக்கு அறிமுக படத்திலேயே மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி எப்படி அவருக்கு மெகா ஹிட்டானதோ அதேபோல் அவருக்கு பிறகு கார்த்திக்குதான் அது நடந்தது.

பருத்திவீரன் பிரச்னை: இருந்தாலும் பருத்திவீரனால் அமீருக்கு சில வடுக்கள் இருக்கின்றன. அந்தப் படத்துக்கு பணம் முதலீடு செய்யப்பட்ட விவகாரத்தில் அவருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் முட்டிக்கொள்ள; அது சூர்யா தரப்பு Vs அமீர் என்று மடைமாறியது. அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவந்தாலும் கடந்த சில வாரங்களாகவே பருத்திவீரன் பிரச்னைதான் ஹாட் டாபிக்.
நடிகர்: கடைசியாக அமீர் ஆதிபகவன் படத்தை இயக்கினார். அதன் பிறகு இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த வடசென்னை படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக அவரது நடிப்பில் மாயவலை ரிலீஸாகிறது. வாடிவாசல் உருவாகவிருக்கிறது. மேலும் இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தையும் இயக்குகிறார்.
மௌனம் பேசியதே தயாரிப்பாளர் பேட்டி: சூழல் இப்படி சில நாட்களுக்கு முன்பு மௌனம் பேசியதே படம் ரிலீஸாகி 21 வருடஙக்ள் நிறைவு செய்ததை ஒட்டி அமீர் நன்றி தெரிவித்து உருக்கமான அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான கணேஷ் ரகு தமிழ் ஃபில்மிபீட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
எப்படி உருவானது மௌனம் பேசியதே: அவர் அளித்த பேட்டியில், "நண்பர்கள் எல்லாம் சேர்ந்துதான் அபராஜித் பிலிம்ஸை தொடங்கி நந்தா படத்தை தயாரித்தோம். அப்போதிலிருந்து அமீர் எனக்கு பழக்கம். அவரது திறமையை பார்த்த எனது நண்பர் வெங்கி என்னிடம் வந்து அமீரிடம் கதை இருந்தால் அவரை இயக்குநராக வைத்து அடுத்தப் படத்தை தொடங்கலாம் என்றார்.
ஒருநாள் விளையாட்டாக அவரிடம் கதை கேட்டேன். அந்தக் கதை என்னை ரொம்பவே பாதித்துவிட்டது. பிறகு சூர்யாவை ஹீரோவாக வைத்து படத்தை ஆரம்பித்தோம். ஹீரோயின் மட்டும் கிடைக்கவில்லை. நந்தா கதாபாத்திரத்துக்கு ஜோடி கிடைத்தாலும் மெயின் ஹீரோயின் கிடைக்கவில்லை. மெயின் ஹீரோயினுக்காக மும்பைவரை சென்றோம். ஆனால் யாரும் செட் ஆகவில்லை.
திரிஷா என்ட்ரி: மும்பை பயணத்தை முடித்துவிட்டு சென்னையில் நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒரு ஃப்ரூ காபி விளம்பர பேனரில் திரிஷாவை பார்த்தோம். உடனடியாக அவரை அப்ரோச் செய்தேன். அவரும் அவரது தாயும் ஒத்துக்கொண்டார்கள். இப்போது திரிஷா மிகப்பெரிய நடிகையாக இருப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியடைகிறேன்.
அமீருக்கும் எனக்கு சண்டை: அமீரும் நானும் ரொம்பவே ஜாலியாக பேசிக்கொள்வோம். இருந்தாலும் அடிக்கடி சண்டை வரும். வாலி எழுதிய பாடலை படத்தில் பயன்படுத்த முடியவில்லை. அதனால் அவருக்கும் எனக்கும் சண்டை வந்தது. பலர் என்னிடம் வந்து அமீருக்கு வேலையே தெரியல அவரை மாத்துங்க என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் நான் அவர் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தேன்.
ஏனெனில் அவரை மாதிரி ஒரு தொழில் பக்தி உள்ளவரை நான் பார்க்கவில்லை. பட தயாரிப்பின்போது நான் அமெரிக்காவில் கொஞ்ச நாட்கள் இருப்பேன். அப்போது அமீர் நினைத்திருந்தால் 80 லட்சமோ 90 லட்சமோ எடுத்திருக்கலாம். அவுட்டோர் யூனிட்டிலோ இல்லை காஸ்ட்யூம் விஷயத்திலோ இல்லை ஏதோ ஒரு விஷயத்திலோ அட்ஜெஸ்ட் செய்து அவருக்கு தேவையான பணத்தை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











