நெசமா, நெசமில்லையா..? லண்டனில் பிரபல நடிகை ரகசிய திருமண நிச்சயதார்த்தம்? ரசிகர்கள் வாழ்த்து!
மும்பை: பிரபல நடிகை ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபல இந்தி நடிகை மெளனி ராய். ரன், மேட் இன் சைனா, கோல்ட் உட்பட சில இந்தி படங்களில் நடித்துள்ளார்.
யஷ் நடித்து வெளியான, கே.ஜி.எஃப் படத்தின் இந்தி பதிப்பில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

சூப்பர் ஹீரோ படம்
'நாகினி' தொடரில் நடித்ததன் மூலம் பல்வேறு மொழிகளில் ரசிகர்களை பெற்ற மெளனி ராய், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார். இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிரம்மாஸ்திரா படத்தை கரண் ஜோஹர் தயாரித்து வருகிறார். சூப்பர் ஹீரோ படமான இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார் மெளனி ராய். அயன் முகர்ஜி இயக்குகிறார்.

விளம்பர படப்பிடிப்பு
லாக்டவுன் காரணமாக, இந்தப் படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. இந்நிலையில் போட்டோஷூட் ஒன்றுக்காக, லாக்டவுனுக்கு முன் அபுதாபி சென்ற நடிகை மெளனி ராய், அங்கேயே சிக்கிக் கொண்டார். சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. பின்னர் நான்கு மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில், அங்கிருந்து விளம்பர படப்பிடிப்புக்காக லண்டன் சென்றார்.

புகைப்படங்கள்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் அவரும் ஒருவர். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 13.7 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். பல டாப் ஹீரோயின்களுக்கு கூட இவ்வளவு பாலோயர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார், மெளனி ராய்.

வைர மோதிரம்
தற்போது லண்டனில் இருக்கும் அவர், அங்கிருந்து தினமும் ஒன்று அல்லது இரண்டு என விதவிதமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அவர் கையில் மின்னும் வைர மோதிரம் ஒன்று இருந்தது. அனைவரின் கண்களையும் அந்த மோதிரம் இழுத்தது. அது திருமண நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு, மெளனி ராயின் தோழிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

நிச்சயதார்த்த மோதிரம்
குறிப்பாக அவருடைய நெருங்கிய தோழியும் நடிகையுமான ரோஷினி சோப்ரா வாழ்த்து தெரிவித்திருந்தார். இதைக் கண்டு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் லண்டனில் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும் அது நிச்சயதார்த்த மோதிரம்தான் என்றும் பாலிவுட்டில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், அது உண்மையா, இல்லையா என்பதை மெளனி ராய் உறுதிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications











