குறைந்து வரும் விஜய் சேதுபதியின் ஹீரோ இமேஜ்.. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவு!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஹீரோ, வில்லன் என்று எந்த கேரக்டரையும் விட்டு வைப்பதில்லை.
ரஜினி, கமல், விஜய் என அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் வில்லனாக மல்லுக் கட்டி வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
இவர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான மாமனிதன், டிஎஸ்பி ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன.

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியில் தன்னை சிறப்பான நடிகராக மாற்றிக் கொண்டுள்ளார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. விஜய், ரஜினி, கமல் என தமிழில் அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் வில்லனாக நடித்து மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மிரட்டலான வில்லன் கேரக்டர்கள்
கமலுடன் இவர் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் சர்வதேச அளவில் 450 கோடி ரூபாய்களை கடந்து வசூலில் மிரட்டியது. இந்தப் படத்தில் சந்தனம் என்ற கேரக்டரில் வில்லனாக மிரட்டியுள்ளார். படத்தில் சூர்யா ஏற்று நடித்திருந்த ரோலக்ஸ் கேரக்டருக்கு பயப்படும் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும் படத்தில் இவருக்கு 3 மனைவிகள் இருந்ததும் இந்தக் கேரக்டரின் சுவாரஸ்யத்தை கூட்டியது.

தளபதி 67 படத்தில் விஜய் சேதுபதி?
இறுதியில் காயமடைந்த நிலையில் விஜய் சேதுபதி காணப்பட்ட நிலையில், இந்த கேரக்டர் தளபதி 67 படத்தில் லோகேஷ் யூனிவர்சில் இணையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது இதை விஜய் சேதுபதி மறுத்துள்ளார். இந்த கேரக்டர் தொடர்வதை தான் விரும்பவில்லை என்றும் ரசிகர்களும் விரும்ப மாட்டார்கள் என்றும் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டிலும் பிசி
தமிழ், தெலுங்கில் மட்டுமில்லாமல் இந்தியிலும் இவரது பயணம் தொடர்ந்து வருகிறது, கத்ரீனா கையிப் உள்ளிட்ட முன்னணி ஹீரோயின்களுடன் இவர் நடித்து வருகிறார். இதனிடையே இவர் ஹீரோவாக நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மாமனிதன் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தொடர்ந்து தற்போது டிஎஸ்பி படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஓடாத படத்திற்கு சக்சஸ் பார்ட்டி?
இதனிடையே இந்தப் படம் வெளியாகி ஒரே நாளில் படத்தின் சக்சஸ் மீட்டை இயக்குநர் பொன்ராமுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படம் ஒரு நாளில் தமிழகத்தில் ஒரு கோடி ரூபாய் வசூலை மட்டுமே பெற்ற நிலையில் அவசர அவசரமாக இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டை நடத்தி வெற்றி விழாவிற்கான மதிப்பை அவர் குலைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ப்ளூ சட்டை மாறன் வீடியோ பதிவு
இதனிடையே இதுகுறித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ளார். சமீப காலங்களில் விஜய் சேதுபதியின் ஹீரோ இமேஜ் குறைந்துள்ளதாகவும் வில்லன் கேரக்டரில் அவர் நடித்து வெளியான படங்கள் மட்டுமே வரவேற்பை பெற்றுள்ளதாகவும் இந்த வீடியோவில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











