Vijay Antony: சீரியஸாக பேசிய விஜய் ஆண்டனி.. சந்தானம் காமெடியைச் சொல்லி பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை!
சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனிக்கும் பிரபல சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறனுக்கும் இடையிலான வார்த்தை மோதல் எப்போதுதான் நிற்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பும் அளவிற்கு இருவருக்கும் இடையில் வார்த்தைப்போர் தொடர்ந்து நீடிக்கின்றது. ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனி எதுவுமே பேசவில்லை என்றாலும் ப்ளூ சட்டை மாறன் விடுவதாக இல்லை. தொடர்ந்து விஜய் ஆண்டனியை எதாவது கூறி வம்புக்கு இழுத்துக்கொண்டே உள்ளார். இந்நிலையில் தற்போது சந்தானம் காமெடி ஒன்றைக் கூறி வம்புக்கு இழுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்துகொண்டே நடிகராக மாறியவர்கள் பலர் உள்ளனர். இவர்களில் கதாநாயகனாகவே அறிமுகமாகி கதாநாயகனாகவே நடித்துக் கொண்டு இருப்பவர் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி. விஜய் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி, கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான கிழக்கு கடற்கரைச்சாலை படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதால், தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பின்னர் சலீம், பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் சாதுவான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வந்த விஜய் ஆண்டணி அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஷன் படங்களில் நடிக்கத்தொடங்கினார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த படங்களில் மிகவும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற படம் என்றால் அது தொடக்க காலத்தில் வெளிவந்த நான், சலீம் உள்ளிட்ட படங்களைக் கூறலாம்.
பிச்சைக்காரன்: ஆனால் தமிழ்நாடு போன்ற சினிமா ரசிகர்களைக் கொண்ட சினிமா வட்டாரத்தில் குடும்பப் பெண்கள் மத்தியில் சென்று சேரும் படமே மிகவும் பிரமாண்ட வெற்றிப்படமாக பார்க்கப்படுகின்றது. அப்படி விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்பைப் பெற்ற படம் பிச்சைக்காரன். அதேபோல் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் என்றால் அது ரோமியோ படம்தான். இந்த படம் சுமாராகவே சென்றது. இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் மழை பிடிக்காத மனிதன் ஆகும்.

ப்ளூ சட்டை மாறன்: இந்த படம் வெளியான பின்னர் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கும் விஜய் ஆண்டனிக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. படத்தின் விமர்சனத்தின்போது ப்ளூ சட்டை மாறன் மிகவும் காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டு பதிலடி கொடுத்திருந்தார். இதுமட்டும் இல்லாமல் ஸ்டார் படத்தின் விமர்சனத்தின்போது கூட சம்பந்தமே இல்லாமல் விஜய் ஆண்டனி குறித்து போகிற போக்கில் கலாய்த்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். அண்மையில் வெளியான கல்கி 2898 ஏ.டி படத்தில் பிரபாஸின் நடிப்பைப் பார்த்த பின்னர் ப்ளூ சட்டை மாறன் நடத்திய எக்ஸ் பக்க வாக்கெடுப்பில் நடிக்கவே தெரியாத நடிகர்கள் யார் என கேள்வி எழுப்பி நான்கு நடிகர்களின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அதில் விஜய் ஆண்டனியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
சந்தானம் காமெடி: இப்படியான நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் பேச்சுக்கு சந்தானம், சேஷு ஆகியோர் நடிப்பில் உருவான காமெடியை கொண்டு பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். விஜய் ஆண்டனி, " எனக்கு சினிமாவில் செண்டிமெண்ட் கிடையாது. ராகுகாலம் எனப்படுவது கெட்டநேரம் எனக் கூறினால், நான் ராகுகாலத்தில் படத்தினை தொடங்கிக் காட்டுகின்றேன். ராகு காலம், எமகண்டம் என்கின்ற பெயர்களில்கூட படங்களில் நடிக்கத் தயார். இனிவரும் காலங்களில் எனது படங்களின் டைட்டிலும் கூட கரடுமுரடாகத்தான் இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

கலாய்க்கப்பட்ட விஜய் ஆண்டனி: விஜய் ஆண்டனியின் இந்த பதிவுக்கு ப்ளூ சட்டை மாறன், "நான் யாருன்னு என்னை கேக்கறதை விட, மத்தவங்ககிட்ட கேட்டுப்பாரு. அச்சச்சோ.. அவரா? பயங்கரமான ஆளாச்சே. அவர்கிட்ட ஜாக்ரதையா இருப்பா.. அப்டின்னு சொல்லுவாங்க" என தனது எக்ஸ் பக்கத்தில் பங்கமாக கலாய்த்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவுக்கு இணையவாசிகள் பலரும், " எப்போதுதான் இவங்க வார்த்தைப்போர் முடியும்" என கேள்வி எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











