நெப்போலியன் குடும்பம் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. முக்கிய புள்ளியுடன் சந்திப்பு.. மகன் செம ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருக்கிறது. எனவே சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில் கடந்த வருடம் நெப்போலியனின் மகனுக்கும், அக்ஷயா என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு பிறகு உச்சக்கட்ட மகிழ்ச்சியோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள் இரண்டு பேரும்.இந்தச் சூழலில் முக்கிய புள்ளி ஒருவர் நெப்போலியனின் குடும்பத்தை சந்தித்திருக்கிறார்.
கோலிவுட்டின் மூத்த மற்றும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்புகளை அவரும் சரியாக பயன்படுத்தி படிப்படியாக முன்னேறினார். கதாநாயகன் மட்டுமின்றி வில்லனாகவும் நடித்து அசத்திய அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் பத்து வயதில் கண்டறியப்பட்டது.
அமெரிக்காவில் செட்டில்: இதற்கிடையே அரசியலிலும் காலடி வைத்த நெப்போலியன் மத்திய இணையமைச்சராக பதவி வகித்தார். சூழல் இப்படி இருக்க தனது மகனுக்கான சிகிச்சை இந்தியாவைவிட அமெரிக்காவில் சிறப்பாக கிடைக்கும் என்பதால்; குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்கு ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்தும்; மென்பொருள் நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தியும் வருகிறார் நெப்போலியன்.

மகனுக்கு திருமண ஏற்பாடு: அந்த மென்பொருள் நிறுவனத்தில்தான் மகன் தனுஷ் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க தனது மகன் தனுஷுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார் நெப்போலியன். அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை நெப்போலியனும், அவரது மனைவியும் பார்த்தார்கள். தமிழ்நாட்டில் வைத்து சிம்ப்பிளாக நிச்சயதார்த்தம் முடிந்தது.
ஜப்பானில் நடந்த திருமணம்: நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து இருவருக்குமான திருமணம் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜப்பானில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் குஷ்பூ, மீனா, கலா மாஸ்டர், ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். திருமணத்தில் நடந்த நடனம் தொடர்பான நிகழ்வுகளை கலா மாஸ்டர்தான் கவனித்திருந்தார். திருமணத்துக்கு பிறகு தனுஷும், அக்ஷயாவும் உச்சக்கட்ட மகிழ்ச்சியோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள்.
காவல் துறையில் புகார்: இரண்டு பேரும் மகிழ்ச்சியோடு குடும்பத்தினை நடத்திவந்தாலும் ஒரு சிலரோ அவர்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பிவருகிறார்கள். அதிலும் தனுஷின் உடல்நிலை குறித்தும்; வேண்டுமென்றே தனுஷுக்கு அக்ஷயாவை திருமணம் செய்து வைத்து அக்ஷயாவின் வாழ்க்கையை கெடுத்துவிட்டார்கள் என்று தங்கள் இஷ்டத்துக்கு பேசினார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த நெப்போலியன் திருநெல்வேலி எஸ்.பி அலுவலகத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறார்.

கனிமொழி எம்.பி. சந்திப்பு: இந்நிலையில் திமுக எம்.பியான கனிமொழி ஜப்பான் சென்றிருக்கிறார். அப்போது நெப்போலியன் வீட்டுக்கு சென்ற அவர் அங்கு தனுஷ், அக்ஷயா, நெப்போலியன், அவரது மனைவி, இன்னொரு மகன் ஆகியோரை சந்தித்தார். அதுமட்டுமின்றி தனுஷ் மற்றும் அக்ஷயாவுக்கு தன்னுடைய திருமண வாழ்த்தை தெரிவித்த கனிமொழி அவர்களுக்கு பரிசு ஒன்றையும் அளித்தார். இந்த சந்த்ப்பு குறித்து நெப்போலியன், நான் பெரிதும் மதிக்கக்கூடிய எனது அரசியல் குரு, தலைவர் கலைஞர் அவர்களின் மகள் திருமதி கனிமொழி அவர்கள், ஒரு வாரகாலம் ஜப்பானுக்கு வருகைதந்துள்ளார்..!
நான்கு நாட்களுக்கு முன்பாக ஜப்பானின் இந்திய தூதுவர் திரு சிபி ஜார்ஜ் அவர்கள் கொடுத்த விருந்தில் , தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் திரு ரேவந்த் ரெட்டி அவர்களும், கனிமொழி அவர்களும் நானும், கலந்து கொண்டோம்..! இன்று ஏப்ரல் 21 திங்கள் கிழமை, திருமதி கனிமொழி அவர்கள், ஜப்பானில் நாங்கள் வசிக்கும் எங்கள் இல்லத்திற்கு வருகைதந்து தனுஷையும் அக்ஷயாவையும்வாழ்த்தினார்கள்...! சிலமணி நேரம் தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி பழைய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டோம்..!
மகிழ்வோடும், மனநிறைவோடும் அவர்களை வழி அனுப்பி வைத்தோம்..!என்று குறிப்பிட்டிருக்கிறார். கனிமொழி - நெப்போலியன் குடும்பத்தின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன. அந்தப் படங்களை பார்த்த ரசிகர்கள் தனுஷ் செம ஹேப்பியாக இருக்கிறார். இப்படியே அவரது வாழ்க்கை தொடர வேண்டும் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

நெப்போலியன் மகன் கொடுத்திருந்த பதிலடி: முன்னதாக தன்னைப் பற்றி நெகட்டிவ்வாக பேசியவர்கள் பற்றி திருமணத்துக்கு முன்பு குறிப்பிட்டிருந்த தனுஷ்,"எல்லோருக்கும் வணக்கம். எனது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து நிறைய பேர் இன்ஸ்டாவில் போட்டிருந்தீர்கள். அனைவருக்கும் நன்றி. மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய பேர் பாசிட்டிவ்வாக பேசியிருந்தீர்கள். சில பேர் எனது திருமணம் பற்றி நெகட்டிவ்வாக பேசியிருந்தார்கள்.
நிரூபித்து காட்டுகிறேன்: நெகட்டிவ் பேச்சுக்கள் என்னை பெரிதாக எதுவும் செய்யவில்லை. சொல்லப்போனால் அது எனக்கு மோட்டிவேஷனாகத்தான் இருக்கிறது. அப்படி பேசியவர்களிடம் நான் ப்ரூஃப் செய்து வென்று காட்டியே ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். அதை ப்ரூஃப் பண்ணிட்டு உங்களிடம் வந்து பேசுகிறேன். என்னைப் போல் இருக்கும் நிறைய பேர் அதை செய்ய முடியாது இதை செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். அதெல்லாம் கேட்கவே கூடாது. விட்டுக்கொடுக்காமல் முடியும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள்" என தெரிவித்திருந்தார்.
நெப்போலியனின் வேண்டுகோள்: அதேபோல் நெப்போலியனும் தனுஷின் திருமணத்துக்கு முன்பு ஒரு வீடியோவில், "எனது அன்பு நண்பர்களே, உலகமெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களே! எங்களது மூத்த மகன் தனுஷின் எட்டு வருட கனவு.. இந்தியாவில் பிறந்தாலும் சூழ்நிலை காரணமாக உலகத்தின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கிறோம். இப்போது மறுகோடியான ஜப்பானுக்கு பயணம் செய்ய ஒரு வருடம் திட்டமிட்டு ஆறு மாதங்களாக அதற்கு செயல் வடிவம் கொடுத்து ஒரு மாதமாக பயணம் செய்து இப்போது தனுஷின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறோம்.

சாதித்துவிட்டான்: தனுஷுக்கு இது எல்லையில்லா மகிழ்ச்சி. எங்களுக்கு இது அளவில்லா மன நிறைவு.சாதித்துவிட்டான். இத்தருணத்தில் சில விஷயங்களை உங்களிடம் பகிர ஆசைப்படுகிறேன். எங்கள் வாழ்வை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்கிறேன். நம் பெற்றோரின் கனவுக்காகவும், நமது கனவுக்காகவும், நமது பிள்ளைகளின் கனவுக்காகவும் அவசியம் வாழ வேண்டும். அப்படி வாழ்ந்துதான் பார்க்க வேண்டும். கடமையை நிறைவேற்ற வேண்டும். வாழ்க்கை ஒருமுறைதான். வாழ்ந்துதான் பார்ப்போமே.
விமர்சிக்காதீர்கள்: உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள். உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். 'ஒரு பக்க சொல் ஒரு யானை பலம்'. எல்லோரையும் வாழ்த்துங்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக மட்டும் பேசாதீர்கள். அது ஒருநாள் உங்களுக்கே திரும்பிவிடும். எண்ணம்போல்தான் வாழ்க்கை. நன்றாக யோசியுங்கள். சிந்தனையை செயல்படுத்துங்கள்" என கூறியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











