அப்பாவை உயிரோட பார்த்தது பிக்பாஸ் வீட்டில் தான்.. அப்புறம் அவர பாக்கவே இல்ல..கண்கலங்கிய லாஸ்லியா!
சென்னை: இலங்கை தமிழரான லாஸ்லியா பிக் பாஸ் தமிழ் 3 சீசனில் பங்கேற்று, அழகான இலங்கை தமிழில் பேசி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர், மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய லாஸ்லியா, அப்பாவை கடைசியா பிக் பாஸ் வீட்டில் தான் பார்த்தேன், அதன் பிறகு நான் பார்க்கவே இல்லை என்று கண்கலங்கி பேசினார்.
இலங்கையில் செய்திவாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் இருந்த லாஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அந்த சீசனில், கவின், சாண்டி மாஸ்டர், சேரன், முகைன் என பலர் இருந்தனர். இந்த சீசன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீசனாக இருந்தது. இதில், லாஸ்லியாவும் கவினும் காதலித்து வந்தனர். அப்போது, பத்து வருடங்களுக்குப் பிறகு மகளை பார்ப்பதற்காக கனடாவில் இருந்து வந்த லாஸ்லியாவின் அப்பா, காதலிப்பதற்குத்தான் இங்கு வந்தாயா என்று லாஸ்லியாவை கடுமையாக திட்டினார்.

பிரிந்தனர்: அதன்பிறகு, லாஸ்லியா, கவினிடம் பேசாமல் இருந்தார், இதனால் கவின் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்துவிட்டார். வெளியே வந்த பின் லாஸ்லியா, கவின் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. இவர்களின் காதல் பிரேக் அப் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் தான், லாஸ்லியாவின் தந்தை உயிரிழந்தார். பின் சினிமாவில் கவனம் செலுத்தி நடிக்கத் தொடங்கினார் லாஸ்லியா. ஹர்பஜன் சிங் நடித்த பிரண்ட்ஷிப் படம் மூலம் சினிமாவுக்கு லாஸ்லியான அறிமுகமானார். பின்பு கூகுள் குட்டப்பா படத்தில் நடித்திருந்தார்.
மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்: தற்போது, லாஸ்லியா, நடித்திருக்கும் 'மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' திரைப்படம் 24ந் தேதி தியேட்டரில் வெளியானது. அருண் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் திரைப்படத்தில், ஹரி பாஸ்கர், பிக் பாஸ் ரயான் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய லாஸ்லியாவிடம், தொகுப்பாளர், அப்பா ரொம்ப கண்டிப்பானவரா, ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் மீது அவ்வளவு கோவப்பட்டார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த லாஸ்லியா, அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்டானவர் கிடையாது. ஆனால், அந்த நேரத்துல பிக் பாஸ்னா என்னனு அவருக்கு தெரியாது, பிக் பாஸ் நிகழ்ச்சியை அவர் பார்த்தது கூட இல்ல. நான் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சிக்கு போகிறேன் என்று சொன்ன போது கூட, அவர் தொகுப்பாளினியா போறியா என்று தான் கேட்டாரு. அதுக்கு அப்புறம் தான் நான் எல்லா விஷயத்தையும் அவர் கிட்ட சொன்னேன்.
கண்கலங்கிய லாஸ்லியா: நான் நிகழ்ச்சிக்கு போனதுக்கு பிறகு தான் நூறு நாள் வெளிய வர முடியாது என்ற விஷயமே அப்பாக்கு தெரிஞ்சுச்சு. கனடாவில் இருந்து வந்திருந்த அப்பா, பிக் பாஸ் ஷோக்கு கால் பண்ணி, நான் மூணு நாள் தான் இருப்பேன் மறுபடியும் கனடாவிற்கு போயிடுவேன். அதுக்குள்ள என் மகளை பாக்கணும் சொல்லிட்டு வெளியில் அனுப்ப சொல்லி கேட்டாரு. ஆனால், சேனல் அதுக்கு ஒத்துக்கவே இல்ல, அப்போத்தான் அப்பா உள்ளே வந்து பார்த்தாரு. நான் அப்பாவ கடைசியா இந்த பிக் பாஸ் வீட்டில் தான் பார்த்தேன், நான் வெளில வர்றதுக்குள்ள அப்பா மீண்டும் கனடா போயிட்டார். அதன் பிறகு அவரை நான் பிணமாகத்தான் பார்தேன் என்று கண்ணீருடன் லாஸ்லியா பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











