Mr. X Trailer: வெறித்தனமா இருக்கும் Mr. X டிரைலர்.. ஆக்ஷன் காட்சியில் மிரட்டும் ஆர்யா மஞ்சு வாரியர்
சென்னை: இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து உருவாகியுள்ள படம் Mr. X . இந்த படம் ஏப்ரல் 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலர் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
நடிகர் ஆர்யாவின் Mr. X படத்தின் கதையைப் பொறுத்த வரையில் இது ஒரு ஸ்பை திரைப்படம் என்று ஏற்கனவே படக்குழு தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் அண்மையில் பாலிவுட்டில் வெளியான ஸ்பை திரைப்படமான துரந்தர் படத்தை மிஞ்சும் அளவிற்கு Mr. X படம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, யாரும் வந்து படம் பார்க்க வேண்டாம் என்று படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் மனு ஆனந்த் தெள்ளத் தெளிவாக கூறியது ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குனர் மனு ஆனந்த் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர். மலையாளத் திரையுலகில் இவர் மிகவும் பிரபலமான ஒளிப்பதிவாதராக உள்ளார். இதற்கு முன்னதாக எஃப் ஐ ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதேபோல் விஷ்ணு விஷால் நடித்து வெளியான ஆரியன் படத்தின் கதையை எழுதியதும் இவர்தான். சிறந்த ஒளிப்பதிவாளர் சிறந்த இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்த மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் பலரும் இந்த படத்தில் மீது கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
மனு ஆனந்த் பேச்சு: மிஸ்டர் எக்ஸ் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் துரந்தர் படத்தை மிஞ்சும் அளவிற்கு இந்த படம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு யாரும் வர வேண்டாம், இந்தப் படம் நன்றாக இருந்தால் எங்களை பாராட்டுங்கள், ஆதரியுங்கள். இந்த படம் நன்றாக இல்லை என்றால் எங்களை நீங்கள் பாராட்ட வேண்டிய அவசியமில்லை. ஆதரிக்கவும் வேண்டாம். எங்களை நீங்கள் விமர்சியுங்கள், அதுதான் எங்களுக்கும் நல்லது இந்த சினிமா துறைக்கும் நல்லது என்று தெரிவித்தார்.

தவறான நம்பிக்கை: அதேபோல் இந்த படத்தின் மீது நாங்கள் ஒரு தவறான எதிர்பார்ப்பை உருவாக்க விரும்பவில்லை. இது துரந்தர் அளவிற்கான படம் இல்லை என்றாலும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்தக்கூடிய, பைசா வசூல் ஸ்பை அக்ஷன் படமாக இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கவனம் ஈர்க்கும் டிரைலர்: டிரைலர் வெளியாகி உள்ளதால் டிரைலரில் ஆர்யாவின் கெட்டப் ஆக்ஷன் காட்சிகள் உள்ளிட்டவை படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. அதேபோல் மஞ்சு வாரியர், கௌதம் கார்த்திக் உள்ளிட்டவரின் ஆக்சன் காட்சிகள் டிரைலரிலேயே மிரட்டலாக இருப்பதால் படம் ஒரு கம்ப்ளீட் ஆக்ஷன் டிராமாகவாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. படம் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான எல்லா வேலைகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











