இரண்டு வருடங்களுக்கு பிறகு திரையில் ராணி முகர்ஜி.. வெளியானது மிஸஸ் சட்டர்ஜி Vs நார்வே ட்ரெய்லர்
மும்பை: ராணி முகர்ஜி நடிப்பில் உருவாகியிருக்கும் மிஸஸ் சட்டர்ஜி Vs நார்வே படத்தின் ட்ரெயல்ர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராணி முகர்ஜி. சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் பல தடுமாற்றங்களை சந்தித்த ராணி முகர்ஜிக்கு அமீர் கானுடன் நடத்தின் குலம் என்ற படம் திருப்புமுனையை தந்தது. இதனையடுத்து அவர் ஷாருக்கான், கஜோல் உள்ளிட்டோர் நடித்த குச் குச் ஹோத்தா ஹை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

கமல் ஹாசனுடன் ராணி முகர்ஜி
இதனையடுத்து பல படங்களில் நடித்துவந்த ராணி முகர்ஜி கமல் ஹாசனுடன் ஹேராம் படத்தில் நடித்தார். அந்தப் படம் வணிக ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக இன்றுவரை கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தப் படத்தில் கமலும், ராணி முகர்ஜியும் இணைந்து நடித்த நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல் பலரது ஃபேவரைட்.

அலைபாயுதே ரீமேக்கில் ராணி முகர்ஜி
மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் வெளியாகி சக்கைப்போடு போட்ட அலைபாயுதே படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் ராணி முகர்ஜி நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை மேலும் கவர்ந்தார். இப்படி பல படங்களில் நடித்த ராணி முகர்ஜி ஒருகட்டத்துக்கு மேல் பெரிதாக பட வாய்ப்புகள் ஏதுமின்றி பாலிவுட் திரையுலகில் அவ்வப்போது தலை காண்பித்துவந்தார். அவர் கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ராணி முகர்ஜி நடித்திருக்கும் புதிய படம்
இந்நிலையில் அஷிமா சிபர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்கு ராணி முகர்ஜி கமிட்டானார். இந்தப் படத்துக்கு மிஸஸ் சட்டர்ஜி vs நார்வே என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் ராணி முகர்ஜி டெபிகா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸும், எம்மே ப்ரொடக்ஷனும் இணைந்து தயாரித்திருக்கின்றன.

வெளியானது மிஸஸ் சட்டர்ஜி ட்ரெய்லர்
மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. நார்வேயில் டெபிகா (ராணி முகர்ஜி) அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதுபோல் ட்ரெய்லர் தொடங்குகிறது. இதனையடுத்து அவரையும், அவரது குழந்தைகளையும் பிரிப்பதற்காக நடக்கும் செயல்களிலிருந்து தன்னுடைய குழந்தைகளை காப்பாற்றுவதற்காக டெபிகா போராடுவது போன்று காட்சியமைப்புகள் ட்ரெய்லரில் இருக்கின்றன.
இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படமானது மார்ச 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் மார்ச் 17ஆம் தேதி படம் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











