நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாள்.. அன்னை இல்லத்தில் நெகிழ்ந்து பேசிய எம்.எஸ்.பாஸ்கர்
சென்னை: இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம், செவாலியே என ரசிகர்களால் போற்றப்படுபவர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி யார் நடிக்க வந்தாலும் அவர்களின் ஆதர்ச ஹீரோவாக இருப்பவர் சிவாஜி கணேசன் மட்டுமே. இன்று அவரது 96ஆவது பிறந்தநாள் ஆகும்.
கோலிவுட்டின் முகத்தை மாற்றிய படம் பராசக்தி. கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதிய அந்தப் படத்தின் மூலம்தான் சிவாஜி கணேசன் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படத்தில் சிவாஜியை தவிர வேறு யார் அறிமுகமாகியிருந்தாலும் அதில் உள்ள வெயிட்டேஜை தாங்கியிருப்பார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் அனல் பறந்த கருணாநிதியின் வசனத்தை அடுத்தக்கட்டத்துக்கு சிவாஜி மட்டுமே எடுத்து சென்றார். முதல் படத்திலேயே அப்படி காட்சிகளும், வசனங்களும் அமைவது வரம். அது சிவாஜிக்கு கைகூடியது.

சிவாஜிதான் அடையாளம்: மன்னர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள பலருக்கும் ஆர்வம் இருப்பது உண்டு. ஆனால் யாரும் நேரில் பார்த்ததில்லை. சினிமாதான் அவர்களை அடையாளப்படுத்தியிருக்கிறது. அப்படி பலர் மன்னர்களாக நடித்தாலும் சிவாஜிதான் மன்னர்களுக்கு அடையாளமாக இருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் என யாரை நினைத்தாலும் சிவாஜிதான் ரசிகர்கள் கண் முன்பு வந்து செல்வார்.
கட்டுப்படுத்திய மகேந்திரன்: சிவாஜி போல் ஒரு நடிகர் இனி எங்குமே கிடைக்கமாட்டார். அது பெரும்பாலும் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்வார் என்ற விமர்சனமும் எழுந்தது உண்டு. அதற்கு இயக்குநர் மகேந்திரன் இப்படி பதில் சொன்னார், ""சிவாஜியை ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்கள். நான் அப்படி சொல்லமாட்டேன் சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஏற்ற கதையை இதுவரை யாருமே எழுதியதில்லை. "".

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்: அதற்கு உதாரணமாக சிவாஜி கணேசன் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிய பின்பு அவரது நடிப்பை பார்த்தால் புரியும். படையப்பா, தேவர் மகன், ஒன்ஸ்மோர், பூப்பறிக்க வருகிறோம் என அவர் குணச்சித்திர நடிகராக தோன்றிய படங்களில் ஒரு சீனில்கூட மிகை நடிப்பு இருக்காது. அதுதான் ஒரிஜினல் சிவாஜி கணேசன். அவர் விரும்பியதையும் அதைத்தான் என்பதை எளிதாக உணர்ந்துகொள்ளலாம்.
இன்று பிறந்தநாள்: இந்நிலையில் சிவாஜி கணேசனின் 96ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி சிவாஜி ரசிகர்கள் தங்களால் முடிந்த நலத்திட்டங்களை தமிழ்நாடெங்கும் செய்துவருகின்றனர். சூழல் இப்படி இருக்க நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சிவாஜியின் அன்னை இல்லத்துக்கு சென்று அவரது புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். அதற்கு பிறகு பேசிய அவர், "சிவாஜி மண்ணிலிருந்து மறைந்தாலும் மக்கள் மனதிலிருந்து மறையாதவர். எனக்கு மூன்று அப்பாக்கள். ஒன்று என்னை பெற்ற அப்பா. இரண்டு கலைஞர் கருணாநிதி அப்பா. மூன்று சிவாஜி அப்பா.
சிவாஜி ஒரு உலக நடிகன். அந்த மாதிரியான நடிகனோடு பேசி, பழகுவதற்கான வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது எல்லாம் நான் எந்த ஜென்மத்திலேயோ செய்த புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய படமோ, பாடலோ எதையாவது பார்த்துவிட்டுத்தான் நான் வேலைக்கு கிளம்புவேன். அதனை பார்க்கும்போது அவ்வளவு உற்சாகம் எனக்குள் வரும். அவரது நடிப்பை பார்க்கும்போது அதில் கொஞ்சமாச்சும் நாம் நடிக்க வேண்டும் என தோன்றும்" என்றார்.


Click it and Unblock the Notifications











