மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் ஹரிதாஸ் காலமானார்.. திரைத்துறையினர் இரங்கல்!
சென்னை: மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் மகன் ஹரிதாஸ் விசுவநாதன் காலமானார். அவருக்கு வயது 55.
மறைந்த இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் தமிழ் சினிமாவில் 75ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளராக இருந்தவர்.
டிகே ராமமூர்த்தியுடன் இணைந்து 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் எம்எஸ் விஸ்வநாதன். தனியாக 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

2015ஆம் ஆண்டு மறைந்த எம்எஸ்வி
இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகராகவும் நடிகராகவும் வலம் வந்தார் எம்எஸ் விஸ்வநாதன். ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் எம்எஸ் விஸ்வநாதன். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது 87 வயதில் வயது முதிர்வு பிரச்சனை காரணமாக காலமானார்.

மெல்லிசை மன்னர்
தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று போற்றப்பட்ட எம்எஸ் விஸ்வநாதனுக்கு 7 பிள்ளைகள். அவர்களில் நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் ஆவர். இந்நிலையில் எம்எஸ் விஸ்வநாதனின் இளைய மகனான ஹரிதாஸ் விஸ்வநாதன் இன்று காலமானார்.

20 ஆண்டுகளாக வெளிநாட்டில்
55 வயதான ஹரிதாஸ் விஸ்வநாதன் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ஹரிதாஸ் விஸ்வநாதன் 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியா திரும்பினார் ஹரிதாஸ். சமீபத்தில், அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திரை பிரபலங்கள் இரங்கல்
இந்நிலையில் உடல் நலக்குறைவால் ஹரிதாஸ் இன்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹரிதாஸின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











