ஷகிராவைப் பார்த்து நானும் பாடகியானேன்- முமைத்கான்
தமிழ், தெலுங்கில் கவர்ச்சிக் குத்தாட்டத்துக்கு புது இலக்கணம் வகுத்த முமைத்கான், அடுத்து பாடகியாக அவதாரமெடுத்துள்ளார்.
அடிக்ஷன் என்ற தலைப்பில் தனது முதல் இசை ஆல்பத்தை நேற்று சென்னையில் வெளியிட்டார்.
தமிழில் 'வேட்டையாடு விளையாடு', 'போக்கிரி', 'வில்லு', 'கந்தசாமி' உள்ளிட பல படங்களில் குத்தாட்டம் மற்றும் கவர்ச்சி நடிகையாக நடித்து கிறங்கடித்தவர் முமைத்கான். தமிழகத்தைச் சேர்ந்த இவர் தெலுங்கில் பல ஆண்டுகளாக முன்னணி கவர்ச்சி நடிகையாக திகழ்கிறார்.
200க்கும் மேற்பட்ட படங்களில் கவர்ச்சி நடனமாடியுள்ளார். தெலுங்கில் 'மைசம்மா ஐபிஎஸ்' என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

நடனபோதை...
முமைத்கானுக்கு நாயகியாகும் வாய்ப்புகள் வந்தாலும், அவர் விரும்புவது இந்த ஒற்றைப் பாடலுக்கான நடனத்தைதான். 'வேலை குறைவு... மனசுக்குப் பிடிச்ச நடனம்.. இது நிறைவாக இருக்கிறது' என்கிறார்.

அடிக்ஷன்
நடனத்துக்கு தான் அடிமையாகிவிட்டதை குறிப்பிடும் வகையில், தனது முதல் இசை ஆல்பத்துக்கு அடிக்ஷன் என்று தலைப்பு வைத்திருக்கிறார் முமைத்கான். இதுதான் முதல் ஆசிய இசை ஆல்பம் என்கிறார் முமைத்கான் பெருமையுடன்.

ஷகிரா
சரி ஏன் இந்த திடீர் இசை ஆல்ப ஆசை..?
"உலகப் புகழ் பெற்ற பாடகி ஷகிராதான் இந்த ஆல்பத்தை உருவாக்கக் காரணம். அவர் நடனம் - பாடல் தந்த ஈர்ப்பில்தான் இந்த இசை ஆல்பத்தை உருவாக்கினேன்," என்கிறார் முமைத்கான்.

யு ட்யூபில்
இந்த வீடியோ யூடியூபில் வெளியான ஒரு வாரத்தில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். இனி படங்களில் பாட வாய்ப்பு வந்தால் நிச்சயம் பாடுவேன் என்கிறார் முமைத்கான்.
இந்த மியூசிக் ஆல்பத்திற்கு சர்வதேச புகழ்பெற்ற டினே ஷெய்ஸ்வுட் இசையமைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











