சுஷாந்த் சகோதரிகள் மீது ரியா பரபரப்பு புகார்.. ஜெட் வேகத்தில் வழக்குப்பதிவு செய்த மும்பை போலீஸ்!
மும்பை: சுஷாந்த் சகோதரிகள் மீது ரியா சக்ரவர்த்தி புகார் அளித்ததை தொடர்ந்து மும்பை போலீசார் அவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக மீட்கப்பட்டார்.
சுஷாந்த் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களின் விசாரணையில் சுஷாந்தின் குடும்பத்தாருக்கு துளியும் திருப்தியில்லை.

பீகார் போலீஸ்
சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி மீது அவரது குடும்பத்தாருக்கு சந்தேகம் ஏற்பட போலீஸில் புகார் அளித்தனர். ஆனால் மும்பை போலீஸ் அதனை ஏற்க மறுத்ததாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து தங்களின் சொந்த ஊரான பீகாரில் அம்மாநில காவல் துறையில் புகார் அளித்த சுஷாந்தின் குடும்பத்தினர்.

குற்றச்சாட்டு
இதனை தொடர்ந்து ரியா சக்ரவர்த்தி மீது பீகார் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. விசாரணைக்காக மும்பை சென்ற பீகார் போலீஸுக்கு மும்பை போலீசார் போதிய ஒத்துழைப்பு வழங்காமல் விசாரணைக்கு தடங்கல் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிபிஐ விசாரணை
இதனை தொடர்ந்து பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று சுஷாந்தின் கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சுஷாந்த் வழக்கை கையில் எடுத்த சிபிஐ, காதலி ரியா சக்ரவர்த்தி, மற்றும் அவரது குடும்பத்தினர் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.

ரியா மீது வழக்குப்பதிவு
ரியாவின் வாட்ஸ் ஆப் உரையாடல்கள் மூலம் அவர் சுஷாந்துக்கு தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை கொடுத்தது அம்பலமானது. இதனை தொடர்ந்து போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் ரியா சக்கரவர்த்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.

சகோதரர் கைது
ரியா சக்ரவர்த்தியின் வீட்டில் போதை பொருள் தடுப்புப்பிரிவினர் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக ரியாவின் சகோதரர் ஷோவிக் மற்றும் சுஷாந்த் சிங் மேலாளர் சாமுவேல் மிராண்டா, சுஷாந்த் வீட்டு வேலைக்காரர் தீபேஷ் சாவந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மனோவியல் மருந்துகள்
இந்நிலையில் ரியா சக்கரவர்த்தி சுஷாந்தின் சகோதரிகள் மீது புகார் அளித்துள்ளார். அதாவது சுஷாந்தின் சகோதரிகளான பிரியங்கா சிங் மற்றும் மீத்து சிங் ஆகியோர் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் டெல்லியை சேர்ந்த போலி மருத்துவர் உதவியுடன் சுஷாந்த் சிங்கிற்கு மனோவியல் மருந்துகளை கொடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

ரியா கோரிக்கை
மேலும் ஞாயிற்றுக்கிழமை ரியா சக்ரவர்த்தி பாந்த்ரா போலீசாருக்கு அனுப்பிய தனது புகாரில், டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் பணிபுரியும் பிரியங்கா சிங் மற்றும் டாக்டர் தருண் குமார் ஆகியோரை மோசடி செய்ததற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

மன ரீதியாக பிரச்சனை
மேலும் சுஷாந்த் பைபோலர் டிஸ் ஆர்டரால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மன ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சுஷாந்த் கொண்டிருந்தார் என்றும், ஆனால் தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தனது புகாரில் கூறியுள்ளார்.

நான் கொடுத்த மருந்துகள்
அதோடு ஜூன் 8ஆம் தேதி பிரியங்கா சிங் தனக்கு பரிந்துரைத்த மருந்துகளின் மெஸேஜ்களை சுஷாந்த் தனக்கு போனில் காட்டினார் என்றும் ரியா கூறியுள்ளார். மேலும் நான் கொடுத்த மருந்துகளை ஏற்காமல் அவரது சகோதரி கொடுத்த மருந்துகளைதான் சுஷாந்த் உட்கொண்டார் என்றும் ரியா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

12 மணிநேரத்திற்குள்
அப்போது ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து ஜூன் 8ஆம் தேதியான அன்றே தான் சுஷாந்தைவிட்டு பிரிந்ததாகவும் கூறியுள்ளார். ரியா சக்ரவர்த்தியின் புகாரை ஏற்ற போலீசார், ரியா புகார் அளித்த 12 மணி நேரத்திற்குள் சுஷாந்தின் சகோதரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











