Exclusive - ரஜினிதான் எனது வழிகாட்டி.. பாபர் மசூதி இடிப்பால் சிறைக்கு சென்றேன்.. மூணார் ரமேஷ் பிரத்யேக பேட்டி
சென்னை: மூணார் ரமேஷ் தமிழ் சினிமாவில் நல்ல குணச்சித்திர நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவர் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்து வெளியான லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது. இவர் ஏற்கனவே ரஜினியுடன் சிவாஜி படத்திலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் ரஜினி பற்றியும் அவருடன் பணியாற்றியது பற்றியும் தமிழ் பில்மிபீட்டுக்கு சிறப்பு பேட்டி அளித்தார் மூணார் ரமேஷ்.
பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனாக்காலம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மூணார் ரமேஷ். அந்தப் படத்துக்கு பிறகு தீண்ட தீண்ட, தலைநகரம், புதுப்பேட்டை, சிவாஜி, கிரீடம், பொல்லாதவன், பீமா, ஜெயம்கொண்டான், ஆடுகளம், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை மிகச்சரியாக புரிந்துகொண்டு எதை கொடுக்க வேண்டுமோ அதை அருமையாக நடிப்பில் வெளிக்காட்டும் திறமை கொண்டவர்.

அடையாளம் தந்த புதுப்பேட்டை: மூணார் ரமேஷுக்கு புதுப்பேட்டை திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. தனுஷின் தந்தையாக அதில் நடித்திருந்த மூணார் ரமேஷ் அட்டகாசமான பெர்பார்மன்ஸை வெளிப்படுத்தியிருந்தார். முக்கியமாக தனுஷ் அன்பு கதாபாத்திரத்தை கொலை செய்துவிட்டு ரமேஷ் வீட்டுக்கு வந்து தங்கும்போது, 'பணத்தை உள்ள வை குமாரு', 'கடவுள் இருக்கான் குமாரு' போன்ற வசனங்களை அவர் பேசிய விதம் இன்றுவரை சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
வெற்றிமாறனுடன் கூட்டணி: பாலுமகேந்திராவின் இயக்கத்தில் அறிமுகமானதால் என்னவோ வெற்றிமாறனுடன் நெருங்கிய நட்பில் இருப்பவர் ரமேஷ். வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, விடுதலை என பெரும்பாலான படங்களில் நடித்திருக்கிறார் ரமேஷ். இனி வெற்றிமாறன் இயக்கும் படங்களிலும் ரமேஷுக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது என்பதை எதிர்பார்க்கலாம். அவர் கடைசியாக ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான லால் சலாம் திரைப்படத்தில் நடித்தார்.
பிரத்யேக பேட்டி: இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்தும் லால் சலாம் படத்தில் பணியாற்றியது குறித்தும் தமிழ் பில்மிபீட்டுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நான் சிறு வயதிலிருந்தே ரஜினிகாந்த்தின் தீவிரமான ரசிகர். காளி படத்தின் போஸ்டர்களை எல்லாம் எனது லாங் சைஸ் நோட்டில் ஒட்டிக்கொள்வேன். அதை பார்த்து ஆசிரியர்கள் என்னை பலமாக அடித்திருக்கிறார்கள். அடிப்பதற்கு கை நீட்ட சொன்னால்கூட ஆசிரியரிடம் நான் ரஜினிகாந்த்தின் ஸ்டைலில்தான் நீட்டுவேன்.
தளபதி: ஜானி படத்திலிருந்து நான் ரஜினியின் வெறித்தனமான ரசிகராக மாறிவிட்டேன். தளபதி படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்பதே கணக்கில் இல்லை. அப்போது ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருந்தேன். அப்படியே தளபதி சூர்யா கெட்டப்பில்தான் இருப்பேன். எல்லோருமே என்னை ரஜினி ரசிகர் என்றுதான் அழைப்பார்கள். அவரது ஸ்டைல், நடிப்பு, ஸ்பீடு என அத்தனையும் என்னை ஈர்த்துவிட்டது. அவரது ஆன்மீகமும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
சிறைக்கு சென்றேன்: மதம், சாதியை விட்டொழிந்துவிட்டால் நம் நாடு நன்றாக இருக்கும். அதைத்தான் லால் சலாம் படத்தில் சொல்லியிருக்கிறோம். இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நான் சவுதி அரேபியாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது மசூதி இடிக்கப்பட்டதன் தாக்கம் ரொம்பவே அங்கு இருந்தது. இந்தியாவிலிருந்து அங்கு சென்று வேலை பார்த்தவர்கள் ரொம்பவே பாதிப்பை சாதித்தோம். ஒரு முறையெல்லாம் நான் செய்யாத தவறுக்காக சிறைக்கு எல்லாம் சென்றேன். அங்கு சென்று எந்த நாடு என்று கேட்டார்கள். இந்தியா என்று சொன்னதும் ஒரு பார்வை பார்த்துவிட்டு நீயெல்லாம் பேசலாமா என்று சொல்லி துப்பக்கூட செய்தார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











