வாக்கு வாதத்தில் முடிந்த மர்மர் சக்சஸ் மீட்.. ஆதங்கத்தில் சவால் விட்ட இயக்குநர்.. இப்படி ஆகிப்போச்சே
சென்னை: கடந்த வாரத்தில் பெரிய ஸ்டார்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால், சின்னப் படங்கள் பல படங்கள் ரிலீஸ் ஆனது. அதில் பலரது கவனத்தை ஈர்த்த படம் என்றால் மர்மர். ஹேம்நாத் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில் விமர்சகர்கள் மத்தியிலும் படத்திற்கு நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தது. படத்தின் சக்சஸ் மீட் இன்று அதாவது மார்ச் 12ஆம் தேதி நடைபெற்றது. இதில் இயக்குநருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மர்மர் படம் தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சியாக பவுண்ட் ஃபுட்டேஜ் முறையைக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் பார்த்த ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துப் போனதால் படம் குறித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். இதனால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர். படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் சுமார் ரூபாய் 4 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது படத்தின் மொத்த பட்ஜெட்டை விட அதிகம் என்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது மட்டும் இல்லாமல் வெற்றி விழாவும் கொண்டாடினார்கள்.

படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முதலில் சக்சஸ் மீட்டில் பேசிய இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், நான் தினமும் படக்குழுவினருடன் தியேட்டருக்கு சென்று ரசிகர்களின் விமர்சனத்தைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ரசிகர்கள் படத்தை பாராட்டுகிறார்கள். இந்த படத்தை அவர்கள் இந்த அளவுக்கு வரவேற்றுள்ளது என்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என பேசினார்.
மர்மர்: அதேபோல் பத்திரிகையாளர்கள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதில் அளிக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டது. அதாவது, பத்திரிகையாளர்கள் தரப்பில் இருந்து, படத்தின் புரோமோஷனுக்காக பல இன்ஃபுளூயன்சர்களுக்கு நீங்கள் பணம் கொடுத்து விளம்பரம் செய்துள்ளீர்கள். அவர்கள் ஓவராக படத்திற்கு பில்டப் கொடுத்ததால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்போடு சென்ற ரசிகர்கள் ஏமாந்து போய் உள்ளார்கள். இதனால் ரசிகர்கள் அப்செட் ஆகி படம் குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகிறார்களே என கேள்வி முன்வைக்கப்பட்டது.

வாக்குவாதம்: இந்த கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர், " படத்தை பாராட்டி வீடியோ போட்ட பல ரசிகர்களின் வீடியோ என்னிடம் உள்ளது. எங்களது நோக்கம் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதானே தவிர, படத்திற்கு ஓவர் பில்டப் கொடுப்பது இல்லை. மேலும், நான் நாள்தோறும் தியேட்டருக்கு சென்று ரசிகர்களின் விமர்சனத்தைக் கேட்டு வருகிறேன். ரசிகர்கள் படத்தை பாராட்டுகிறார்கள். படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்னர் நாங்கள் செய்தியாளர்களுக்கு முதலில் படத்தை திரையிட்டு காட்டினோம். அதேபோல் பல்வேறு வயதுக்குட்பட்ட மக்களை அழைத்து வந்து படத்தை போட்டுக் காட்டினோம். அதன் பின்னர்தான் படத்தை ரிலீஸ் செய்தோம்.

சவால்: இப்போதும் 150 பேரை நீங்களே அழைத்து வாருங்கள். அவர்கள் பலதரப்பு வயதுடையவராக இருந்தால் போதும். அவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு படம் பிடிக்கவில்லை என்றால், படத்தை தியேட்டரில் இருந்து தூக்கிவிடுகிறோம்" என சவால் விட்டார். இது தொடர்பான வீடியோக்களும் தகவல்களும் வேகமாக பரவி வருகிறது. சக்சஸ் மீட் இப்படி சவால் மீட்டாக மாறிவிட்டதே என பேசி வருகிறார்கள், விஷயம் தெரிந்தவர்கள்.


Click it and Unblock the Notifications











