ஏஆர் ரஹ்மான் அறிமுகப்படுத்திய சர்வதேச இசை டிஜிட்டல் தளம்.. தமிழில் பெயர் சூட்டிய இசைப்புயல்!
மும்பை : சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை தன்னுடைய இசை மூலம் கட்டிப் போட்டு வருபவர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்.
அவரது இசையில் தொடர்ந்து பல சிறப்பான படங்களை பாடல்களை ரசிகர்கள் பெற்று வருகின்றனர்.
சமீபத்தில் அவரது இசையில் வெளியான பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வேறு லெவலில் கவர்ந்து வருகின்றன.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் அடுத்தடுத்த பல படங்கள் சர்வதேச அளவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்தியாவில் மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் இவர் சிறப்பான இசையமைப்பை வழங்கி வருகிறார். தமிழிலும் இவரது இசையில் கடந்த ஆண்டு அதிகமான படங்கள் வெளியாகி ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளன.

30 ஆண்டுகளை கடந்த இசைப்பயணம்
இவரது இசைப்பயணம் துவங்கிய ஆண்டு 1992. ரோஜா என்ற படத்தின் அசத்தல் பாடல்கள் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த ஏஆர் ரஹ்மான். தொடர்ந்து தனது இசை சாம்ராஜ்யத்தை 30 ஆண்டு காலங்களை தாண்டி விரிவுப் படுத்தி வருகிறார். இவரது சாம்ராஜ்யத்திற்கு ஆஸ்கார் விருதுகள் போன்றவை அழகு சேர்த்துள்ளன.

எவர்கிரீன் பாடல்களுக்கு சொந்தக்காரர்
இந்த 30 ஆண்டுகால இசைப் பயணத்தில் திரைத்துறையின் பல தவிர்க்க முடியாத எவர்கிரீன் பாடல்களுக்கு சொந்தக்காரராக உள்ளார் ஏஆர் ரஹ்மான். இவரது இசையில் வெளியான பல பாடல்கள், ரசிகர்களை வாழ்வின் அங்கமாக மாறியுள்ளன. முதல் படத்திலேயே தன்னை சர்வதேச அளவில் நிரூபித்த ஏஆர் ரஹ்மான் முன்னதாக இளையராஜாவின் இசைப் பட்டறையில் இருந்து பயிற்சி பெற்றவர் என்ற பெருமையையும் கொண்டவர்.

ஏஆர் ரஹ்மான் பிறந்தநாள் கொண்டாட்டம்
இன்றைய தினம் தன்னுடைய 56வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் ஏஆர் ரஹ்மான். இதையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பல பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்து மழையில் ஏஆர் ரஹ்மானை நனைத்து வருகின்றனர். அந்த வகையில் ஏஆர் ரஹ்மானின் மகன் அமீனும் தன்னுடைய தந்தைக்கு சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏஆர் ரஹ்மான் மகன் வாழ்த்து
முதலில் தன்னுடைய தந்தை ஏஆர் ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள அமீன், தன்னுடைய எல்லாமுமாக உள்ள தன்னுடைய தந்தைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய தந்தையாகவும் ஆசிரியராகவும் அவர் இருப்பதற்கு தான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாகவும் தான் அவரை அதிகமாக விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏஆர் ரஹ்மானின் புதிய இசைத்தளம்
இதனிடையே தன்னுடைய புதிய இசை மற்றும் வெப் தளம் குறித்து இசைப்புயல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். கற்றார் என்ற அந்த டிஜிட்டல் இசைத்தளம் விரைவில் துவங்கவுள்ளதாகவும் அதற்கான அடுத்தக்கட்டத்தை நோக்கி தற்போது நகர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தளம் மூலம் கலைஞர்கள் தங்களது படைப்புகளை பட்டியலிட்டு அதன்மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏஆர் ரஹ்மானின் தமிழ்ப்பற்று
தனது அடுத்தடுத்த முயற்சிகள்மூலம் தன்னுடைய தமிழ்ப்பற்றை நிரூபித்து வருபவர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். தமிழை ஆஸ்கார் மேடைக்கு கொண்டு சென்றவர். இந்நிலையில் தன்னுடைய சர்வதேச டிஜிட்டல் இசை தளத்திற்கு கற்றார் என்று தமிழில் வைத்து தமிழுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.


Click it and Unblock the Notifications











