GV Prakash: மீண்டும் டைரக்டராகும் தனுஷ்.. கூட்டணியை உறுதி செய்த ஜிவி பிரகாஷ்!
சென்னை: நடிகர் தனுஷ் தற்போது டி50 படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக ப பாண்டி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
டி50 படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிவருவதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் புதிய படத்தை அவர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்காக நீண்ட முடி, தாடி உள்ளிட்டவற்றை வளர்த்திருந்தார் தனுஷ். படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிரட்டியது. இந்நிலையில் அடுத்ததாக டி50 படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது.
தனுஷின் டி50 படம்: இந்தப் படத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் இந்தப் படத்திற்காக தன்னுடைய ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொண்டுள்ளார் தனுஷ். இந்தப் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் டி51 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். தொடர்ந்து பாலிவுட்டிலும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்கத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷ் இயக்கும் 3வது படம்: தனுஷின் சொந்தக்காரர் மகன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தனுஷும் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் மூலம் மூன்றாவது முறையாக தனுஷ் இயக்குநராக களமிறங்கவுள்ளார். விரைவில் இந்தப் படத்திற்கான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷ் தற்போது இந்தப் படத்தை உறுதி செய்துள்ளார்.
உறுதி செய்த ஜிவி பிரகாஷ்: இந்தப் படம் குறித்து தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள ஜிவி பிரகாஷ், தனுஷ் இயக்கவுள்ள மூன்றாவது படத்தில் தான் இசையமைக்கவுள்ளதாக உறுதி செய்துள்ளார். கோபுரம் பிலிம் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என சுற்றி சுற்றி நடித்து வருகிறார் தனுஷ். சினிமாவில் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராக தனுஷ் உள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள்: முன்னதாக ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்த ப பாண்டி என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்ற நிலையில், அடுத்ததாக ஒரு ஃபேன்டசி படத்தை இயக்கத் துவங்கினார். ஆனால் இந்தப் படம் நிறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்த தனுஷ், தற்போது டி50 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் மீண்டும் புதிய படத்தை அவர் இயக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











