ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றார் இளையராஜா.. கடவுளின் பேரால் உறுதியிட்டு கூறுகிறேன் என பதவி ஏற்பு!
டெல்லி : இசைஞானி என்று ரசிகர்களால் மதிக்கப்பட்டு வருபவர் இளையராஜா. இவரது ஏராளமான பாடல்கள் ரசிகர்களின் வாழ்க்கையில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளன.
இந்நிலையில் இவர் ராஜ்யசபா உறுப்பினராக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அமெரிக்காவிலிருந்து வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் அவர் நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

இசையமைப்பாளர் இளையராஜா
இசை ரசிகர்களுக்கு எப்போதுமே இளையராஜா ஸ்பெஷல்தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்னுடைய இசையால் கட்டிப் போட்டு வரும் இளையராஜா, மக்களின் பல வாழ்க்கை சம்பவங்களின் ஒரு பகுதியாக காணப்படுகிறார். காதல், கல்யாணம், விசேஷங்கள் என அனைத்திலும் இளையராஜா தன்னுடைய பாடல்ள் மூலம் அங்கமாக மாறியுள்ளார்.

சுகமான பாடல்கள்
இரவு நேரத்தில் வானில் நட்சத்திரங்களை பார்த்தபடி மல்லாக்கப்படுத்துக் கொண்டு இளையராஜாவின் பாடல்களை கேட்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. இதேபோல காரில், இருசக்கர வாகனங்களில் தனியாக செல்லும்போதும் இவரது பாடல்கள்தான் ஏராளமானவர்களின் துணையாக உள்ளது.

ராஜ்யசபா நியமன எம்பி
இதையொட்டி இளையராஜாவிற்கு பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் அவரையும் அவரது இசையையும் மேலும் பெருமைப்படுத்தும் வகையில் ராஜ்யசபா நியமன எம்பியாக மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது. இதையடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சென்னை திரும்பிய இளையராஜா
இந்த அறிவிப்பின்போது இசைக் கச்சேரிக்காக அவர் அமெரிக்காவில் இருந்தார். தொடர்ந்து கச்சேரியை முடித்துக்கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடு திரும்பினார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் நேரில் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

பதவியேற்ற இளையராஜா
மூன்று தினங்களுக்கு முன்பே நியமன எம்பிக்கள் பதவியேற்ற நிலையில், அன்றைய தினம் இளையராஜா கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அமெரிக்க பயணத்தையடுத்தே அவர் அன்றைய தினம் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் விமானம் மூலம் டெல்லி சென்ற இளையராஜா இன்றைய தினம் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

கடவுளின் பெயரால் பதவியேற்பு
அவர் தனது பதவியேற்பின்போது இந்திய இறையாண்மையை சிறப்பாக கடைப்பிடிப்பேன் என்று கடவுளின் பெயரால் ஆணையிட்டு கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் தற்போது ஏற்றுள்ள கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











