Bhavatharini dies: மயில்போல பொண்ணு ஒன்னு.. குரலால் இதயங்களை வருடிய பவதாரிணி!
சென்னை: ராசய்யா படம்மூலம் கடந்த 1995ம் ஆண்டில் சினிமாவில் பாடகியாக அறிமுகம் ஆனவர் பவதாரிணி. இசைஞானி இளையராஜாவின் மகள் என்ற அறிமுகம் இவருக்கு இருந்தபோதிலும் தன்னுடைய மயக்கும் குரலால் எராளமான பாடல்களை பாடி மிகச்சிறப்பான பாடகியாக தொடர்ந்து நிலைபெற்றவர். புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதற்கேற்ப பல படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றிய பவதாரிணி இன்றைய தினம் உடல்நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமானார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்தார் பவதாரிணி. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.20 மணிக்கு அவர் உயிரிழந்தார். அவரது உடல் நாளைய தினம் சென்னை கொண்டுவரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27, 28ம் தேதகளில் இலங்கையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவும் இலங்கையில் இருந்த நிலையில், அவர் பவதாரிணியின் கடைசி நிமிடங்களில் பவதாரிணியுடன் இருந்துள்ளார். இந்நிலையில் பவதாரிணியின் மரணம் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

பின்னணி பாடகி பவதாரிணி: பிரபல பின்னணி பாடகியாக ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்தவர் பவதாரிணி. இசைஞானி இளையராஜாவின் மகள் என்ற அடையாளம் இருந்தபோதிலும், அதை வைத்து மட்டுமே தன்னை கோலிவுட்டில் நிலைநிறுத்தவில்லை பவதாரிணி. மயில் போல பொண்ணு ஒன்னு என்று அவர் பாடிய பாடல் அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. ரசிகர்களின் இதயத்தை வருடும்வகையில் அமைந்தது. தன்னுடைய தந்தை இளையராஜாவின் இசையில் இந்தப் பாடலை பாடியுள்ளார் பவதாரிணி. முன்னதாக ராசய்யா படத்தில் மஸ்தானா மஸ்தானா என அவர் பாடிய பாடல் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது.
ஏராளமான பாடல்களுக்கு சொந்தக்காரர்: தன்னுடைய தனித்துவமான குரலால் ஏராளமான பாடல்களை பாடி ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளவர் பவதாரிணி. தமிழில் ராசய்யா படத்தின்மூலம் பாடகியாக என்ட்ரி கொடுத்துள்ள இவர் முன்னதாக கடந்த 1984ம் ஆண்டிலேயே மை டியர் குட்டிச்சாத்தான் படத்தில் மலையாள வெர்ஷனில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். தொடர்ந்து ராசய்யா படத்தில் பாடும் வாய்ப்பு 1995ம் ஆண்டில்தான் இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து தன்னுடைய சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இசையில் அடுத்தடுத்த பாடல்களை பாடி அசத்தினார். தேவா, சிற்பி போன்றவர்களின் இசையிலும் பாடல்களை பாடியுள்ளார்.
இசையமைப்பாளர் பவதாரிணி: பின்னணி பாடகியாக மட்டுமின்றி தன்னுடைய அப்பா மற்றும் சகோதரர்கள் வழியில் இசையமைப்பாளராகவும் தன்னை நிரூபித்தார் பவதாரிணி. கடந்த 2002ல் நடிகை ரேவதியின் இயக்கத்தில் வெளியான மித்ர மை ப்ரெண்ட் என்ற படத்தில் இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து டோலிவுட், பாலிவுட் படங்களிலும் இவர் இசையமைத்துள்ளார். பாடகியாக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் சிறப்பான பயணத்தை மேற்கொண்டு வந்தவர் பவதாரிணி. இந்நிலையில் புற்றுநோய் அவரை உலக அளவிலான ரசிகர்களிடமிருந்து பறித்தது மிகப்பெரிய சோகமாக அமைந்துள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி: நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது அடுத்தடுத்த 3 படங்களுக்கு இசையமைத்துவந்தார் பவதாரிணி. இந்நிலையில் அவரது மரணம் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் இளையராஜாவின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் அவரது மறைவிற்கு இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறப்பான பல பாடல்களை பாடியுள்ளார் பவதாரிணி. அழகி உள்ளிட்ட படங்களிலும் பாடல்களை பாடி படத்தின் வெற்றிக்கு தானும் காரணமாக அமைந்துள்ளார். இந்தப் படத்தில் இவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா மிகப்பெரிய ஹிட்டடித்தது.


Click it and Unblock the Notifications











