Santhosh Narayanan: எஞ்சாயி எஞ்சாமி பாடல்.. ஒரு பைசாகூட வருமானம் இல்லை.. சந்தோஷ் நாராயணன் ஓபன்!
சென்னை: கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவலாக ட்ரெண்டாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பாடல் என்ஜாயி எஞ்சாமி. ஆல்பம் பாடலாக வெளியான இந்த பாடலை ரீல்ஸ், டிக்டாக் என அனைத்து தளங்களிலும் ரசிகர்கள் அதிகமாக பயன்படுத்தினர். இந்நிலையில் கடந்த 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் இந்த பாடல் அனைவர் முன்னிலையிலும் பாடப்பட்டது. இந்த பாடலை எழுதிய பாடகர் அறிவு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் அறிவு மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இருவரும் மாறி மாறி இந்த விஷயம் குறித்து பேசினர்.
அந்த பாடலை உருவாக்குவதற்காக தான் 6 மாத காலங்கள் தூக்கமின்றி உழைத்ததாகவும் உண்மை வெல்லும் என்றும் அறிவு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், அந்த நேரத்தில் அறிவு அமெரிக்காவில் இருந்ததாக சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்திருந்தார். மேலும் கடந்த மாதத்தில் நடைபெற்ற நீயே ஒளி இசைக்கச்சேரிக்கும் அறிவிற்கு இன்வைட் அனுப்பியுள்ளதாகவும் அவர் தன்னுடைய நம்பரை பிளாக் செய்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டிருந்தார். அறிவின் கோபம் நீங்குவதற்காக தான் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அட்டகத்தி படம் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்களுடன் கைகோர்த்து இசைப்பணியை தொடர்ந்து வருகிறார். இசை அமைப்பாளராக மட்டுமின்றி இசை நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள சந்தோஷ் நாராயணன், தன்னுடைய தனிப்பட்ட இசை மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது முதல் முயற்சியாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நீயே ஒளி என்னும் பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சந்தோஷ் நாராயணன் இசைநிகழ்ச்சி: கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி பரவலாக அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அடுத்ததாக கமல், பிரபாஸ், அமிதாபச்சன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டரில் நடித்து வரும் கல்கி 2898 AD திரைப்படத்திலும் சந்தோஷ நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் தீம் மியூசிக்கை நீயே ஒளி இசை நிகழ்ச்சியில் அரங்கேற்றி ரசிகர்களின் ஏகோபித்த உற்சாகத்தை அள்ளினார். இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமான இசை கலைஞர்கள் மற்றும் நடன கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று மணி நேரம் எந்தவிதமான சர்ச்சையும் இல்லாமல் நடத்திக் காட்டியுள்ளார்.
எஞ்சாயி எஞ்சாமி பாடல்: நிகழ்ச்சியில் எஞ்சாயி எஞ்சாமி பாடல் ஹைலைட்டாக அமைந்தது. இந்த இசைக் கச்சேரிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த பாடலை எழுதி பாடிய அறிவு குறித்த கேள்விக்கு சந்தோஷ நாராயணன் பதில் அளித்திருந்தார். முன்னதாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் இந்த பாடல் அனைவர் முன்னிலையும் பாடப்பட்ட நிலையில் அறிவு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
அடுத்தடுத்த சர்ச்சை: தொடர்ந்து இந்தப் பாடலை ஆறு மாதங்கள் தூங்காமல் கடுமையாக உழைத்து உருவாக்கியதாகவும் உண்மை எப்போதும் வெல்லும் என்றும் அறிவு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் வெளிப்படை தன்மையுடனே இருக்க விரும்புவதாகவும் தீ, அறிவு மற்றும் தன்னுடைய பங்களிப்பில் இந்தப் பாடல் உருவானதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது ஒருபுறமிருக்க, தற்போது இந்த பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். என்ஜாயி எஞ்சாமி பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆனதை குறிப்பிட்டு இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு அனைவருக்கும் தெரிந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
பைசாகூட கிடைக்கவில்லை: இந்த பாடல் மூலம் தங்களுக்கு கிடைத்த வருமானம் என்ன என்பதை பகிர்ந்து கொள்ள தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டு, இதுநாள் வரையில் இந்த பாடல் மூலம் ஒரு பைசா கூட வருமானம் கிடைக்கவில்லை என்றும் சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால் தான் சொந்த ஸ்டூடியோவை துவங்க உள்ளதாகவும் தனி இசைக்கலைஞர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். இதில் கூடுதலாக தன்னுடைய யூடியூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிளுக்கு செல்வதாகவும் அவர் வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.
வீடியோமூலம் பேசிய சந்தோஷ் நாராயணன்: இதை பொது தளத்தில் வெளிப்படுத்த விரும்பியதாகவும் தனி இசை கலைஞர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் என்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மேலும் அந்த வீடியோவில் தெளிவுபடுத்தியுள்ளார். சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த எஞ்சாயி எஞ்சாமி பாடல் தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. இந்த சர்ச்சைகளால் தீ மற்றும் அறிவு பாடிய பாடல்கள் இன்னும் வெளிவராமல் இருப்பதாகவும் முன்னதாக சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











