வீசும் காற்று முழுக்க அவர் கவிதைகள்.. பாடலாசிரியர் நா. முத்துக்குமாரை கௌரவிக்க தயாரான திரையுலகம்
சென்னை: நா. முத்துக்குமார் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத பாடலாசிரியர்களில் ஒருவர். இரண்டு முறை தேசிய விருதினை தொடர்ந்து வென்ற அவர்; சைமா விருது, ஐந்து முறை தமிழ்நாடு அரசு விருதுகள் உள்ளிட்டவைகளையும் பெற்றிருக்கிறார். கிட்டத்தட்ட 3000 பாடல்கள்வரை எழுதியிருக்கும் அவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் ஜூலை 12ஆம் தேதி அவரது 50ஆவது பிறந்தநாள் வரவிருக்கும் சூழலில் அவரை கௌரவிக்க திரையுலகம் முடிவெடுத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஏராளமான பாடலாசிரியர்கள் இருக்கிறார்கள். இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் நா. முத்துக்குமார். பாலுமகேந்திராவிடம் முதலில் உதவி இயக்குநராக இருந்த அவர்; சீமான் இயக்கிய வீரநடை திரைப்படத்திலிருந்து பாடலாசிரியராக மாறினார். முதல் பாட்டிலேயே தனது எளிமையான மொழியை கொண்டு அனைவரையும் கவர்ந்த அவர் செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி வைத்து அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தார்.
தொடர்ந்து இரண்டு முறை தேசிய விருது: தொடர்ந்து ராம், ஏ.எல்.விஜய், பாலா, லிங்குசாமி, கே.வி.ஆனந்த், ஷங்கர் என பல இயக்குநர்களின் படங்களில் பாடல்களை எழுதிய அவர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா என்று பல்வேறு இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றினார். தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய், சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே ஆகிய பாடல்களுக்காக தொடர்ந்து இரண்டு முறை தேசிய விருது வென்றிருக்கிறார்.

உயிரிழந்த முத்துக்குமார்: தனது பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் என அனைத்திலும் எளிமையை மட்டுமே சொத்தாக வைத்து வென்று காட்டிக்கொண்டே இருந்தார் அவர். அதன் காரணமாக அவருக்கென்று தமிழ்நாட்டில் எக்கச்சக்கம் பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் ஜூலை 12ஆம் தேதி அவரது 50ஆவது பிறந்தநாள் வரவிருக்கிறது. அதனையொட்டி அவரை கௌரவிக்க திரையுலகம் முடிவெடுத்திருக்கிறது.
இசை கான்செர்ட்: இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில், " தனது பாடல்களால் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! அன்புக்குரிய தமிழ் திரையுலக நண்பர்கள், பத்திரிக்கை, ஊடகங்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் வணக்கங்கள். தமிழ் சினிமா பாடல்களை தனது எழுத்துக்களால் இலக்கியமாக்கிய பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் 50ஆவது பிறந்தநாளினில், அவர் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் திரையிசைப் பாடல்களுக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக நடக்கவிருக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
ஒரு தலைமுறைக்கு: தனது எழுத்தால் ஒரு தலைமுறைக்கே காதலையும், ஆறுதல்களையும், நம்பிக்கைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கும், அழியா புகழ் கொண்ட இந்த மாபெரும் கவிஞனுக்கு மரியாதை செய்யும் விதமாக, நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும் பின்னணி பாடகர்களும் பங்கேற்கும் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக இது அமைய இருக்கிறது.
வீசும் காற்று முழுக்க, தன் கவிதைகளை பாடல்களாக கலந்திட வைத்திருக்கும் இந்த கலைஞனோடு தங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத நிகழ்வுகளையும், பணியாற்றிய நினைவுகளையும் ரசிகர்களிடம் பகிர நா.முத்துக்குமாரோடு பணியாற்றிய திரை பிரபலங்களும் நண்பர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். திரையிசைப் பாடல்களில் தனக்கென தனி முத்திரையை பதித்ததோடு, கோடானு கோடி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காது நிறைந்திருக்கும் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாள் விழாவை, நா.முத்துக்குமார் welfare core கமிட்டியோடு இணைந்து நமது ACTC நிறுவனம் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக நடத்த இருப்பதில் பெருமைக் கொள்கிறது" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











