மகள் மறைவுக்குப் பின்னர் விஜய் ஆண்டனியின் முதல் பிறந்த நாள்! வாழ்த்துகளுக்கு மத்தியில் உருகும் தந்தை
சென்னை: தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என தன்னை சினிமாவின் பலதரப்பட்ட துறைகளில் கால் பதித்து அதில் வெற்றியும் கண்ட கலைஞனாக வலம் வருகின்றார் விஜய் ஆண்டனி. 1975ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிறந்த விஜய் ஆண்டனி இன்று தனது 49வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். சினிமாவிற்கு வந்த பின்னர் பல பிறந்த நாள்களை விஜய் ஆண்டனி கொண்டாடி இருந்தாலும், இந்த பிறந்த நாள் விஜய் ஆண்டனிக்கு மிகவும் சோகமான பிறந்த நாள் என்றே கூறவேண்டும்.
விஜய் ஆண்டனி கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். தன்னிடம் உலகத்தரம் வாய்ந்த இசைக் கருவிகள் அப்போது இல்லை என்றாலும், தனது திறமையால் இசைக் கருவிகளின் இடத்தினை வித்தியாசமான சொற்களைப் பாடி நிரப்பினார். இதுவே அவரது அடையாளமாகிப் போனதால் விஜய் ஆண்டனியை பலரும் தனது படங்களில் இசை அமைக்க வாய்ப்பு கொடுத்தனர்.

இவரது இசையில் வெளியான பல படங்கள் ஆல்பம் ஹிட். குறிப்பாக காதலில் விழுந்தேன் படத்தில் இடம் பெற்ற வேகமான டூயட் பாடலான தோழியா காதலியா பாடல் இன்றைக்கும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது. விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன், வேலாயுதம் ஆகிய படங்களுக்கு அடுத்தடுத்து இசை அமைத்ததால் விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் வட்டாரம் இன்னும் அதிகமானது.
கதாநாயகன்: தொடர்ந்து பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்து வந்த விஜய் ஆண்டனி கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் இவரது கதாபாத்திர வடிவமைப்பு என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பிச்சைகாரன் படத்தில் நடித்ததன் மூலம் குடும்பப் பெண்களின் அபிமானத்தைப் பெற்ற நடிகராக மாறினார். பிச்சைக்காரன் 2 படத்தினை தானே இயக்கி, தயாரித்து, நடித்தும் இருந்தார்.

முழுக் கவனம்: படங்களில் நடித்தாலும் தொடர்ந்து இசை அமைப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார். அண்மைக் காலமாக நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதால், இசை அமைப்பதில் கொஞ்சம் குறைவாகவே ஈடுபட்டு வருகின்றார். அடுத்த ஆண்டில் இருந்து இசை அமைப்பதில் முழுக்கவனம் செலுத்தவுள்ளாதாக அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
49வது பிறந்தநாள்: இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இன்று விஜய் ஆண்டனி தனது 49வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தையடுத்து திரையுலகினர் பலரும் விஜய் ஆண்டனியைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மகளின் மறைவுக்குப் பின்னர் விஜய் ஆண்டனி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எனது மகள் இறந்தபோதே நானும் இறந்து விட்டேன் எனக் கூறியிருந்தார்.

மகள் இல்லா பிறந்த நாள்: இந்த வீடியோ விஜய் ஆண்டனி தனது மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிக்காட்டியது. பலரும் இந்த வீடியோவைப் பார்த்து கண் கலங்கினர். இப்படியான நிலையில் தனது மகள் மறைவுக்குப் பின்னர் விஜய் ஆண்டனி கொண்டாடும் முதல் பிறந்த நாள். விஜய் ஆண்டனிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மகள் தன்னுடன் இல்லையே என எங்கும் தந்தை விஜய் அண்டனிக்கு ஃபிலிமி பீட்டின் அரவணைப்புகள். விஜய் ஆண்டனி தனது மனவலிகளில் இருந்து மீண்டு வந்து மக்களை மென்மேலும் மகிழ்விக்கவும் இந்த பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











