Life-ல உடைந்து போயிருந்த அசல் கோளாறு.. அனிருத்திடம் இருந்து வந்த போன் கால்.. எல்லாமே மாறிடுச்சு
சென்னை: அசல் கோளாறு குறித்து தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரியும். இவர் தனது தனித்துவமான பாடல்கள் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸில் இவருக்கு நெகட்டிவான விமர்சனங்கள் வந்ததால், மிகப்பெரிய மன வேதனையில் இருந்தார். அதன் பின்னர்தான் அசல் கோளாறு தமிழ் சினிமாவில் பாடல் எழுதி பாடும் வாய்ப்பை பெற்றார். இது குறித்து அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அசல் கோளாறு இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு மட்டும் இல்லாமல், 90ஸ் கிட்ஸ்களுக்கும் மிகவும் பிடித்த பாடகராக, ராப் இசைக் கலைஞராக திகழ்கிறார். இது மட்டும் இல்லாமல், அவரது பாடலின் வரிகள் கொண்டாட்டத்தை உருவாக்கும் தன்மை உடையதாக இருந்தாலும், மிகவும் கருத்துச் செறிவு கொண்டதாகவும் உள்ளது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அவர் பேசுகையில், " நான் பிக் பாஸ் சென்றபோது வாழ்க்கை மொத்தமாக மாறும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அங்கிருந்து நான் வந்த போது கடுமையான விமர்சனங்களை நான் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. மேலும், இதனால் நான் மிகவும் உடைந்து போய் அழுது கொண்டிருந்த காலகட்டம். அப்போதுதான் இசையமைப்பாளர் அனிருந்திடம் இருந்து எனக்கு போன் வந்தது. அவர் எனக்கு போன் செய்து ஒரு பாடல் செய்ய வேண்டும் ஒர்க் பண்ணலாமா என்று கேட்டார்.

மாறிய வாழ்க்கை: அவரைச் சென்று சந்தித்து வரிகள் எல்லாம் ஓகே. ஆகிவிட்டது. பாடலையும் ரெகார்ட் செய்துவிட்டோம். அதன் பின்னர்தான் எனக்கே தெரியும், அந்த பாடல் விஜய் சாருக்கு என்று ( லியோ படத்தில் இடம் பெற்றநான் ரெடிதான் வரவா பாடல்). அந்த பாடல் ரிலீஸ் ஆன பின்னர் தான் வாழ்க்கை மாறியது. அதுவரை என்னை பலரும் திட்டி வந்தார்கள், அதன் பின்னர் தான் என்னைப் பற்றி பாசிடிவான விமர்சனங்கள் வந்தது. நான் மிகவும் மோசமான காலகட்டத்தை எதிர் கொள்ள காரணமே இந்த நல்ல விமர்சனங்களை எதிர் கொள்வதற்கு தான் என்று புரிந்து கொண்டேன்.
வெற்றிக்கான ஃபார்முலா: எனக்கு இவ்வளவு அன்பு உலகில் நான் எங்கு சென்றாலும் கிடைக்கிறது என்றால் அதற்கு காரணம் எனது தமிழ் தான். இந்த தமிழை பலரும் வியாபாரமாக்க பார்க்கிறார்கள். ஆனால் எனக்கு அந்த தமிழைப் பயன்படுத்தி எனக்கான குடும்பத்தை அன்பால் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனது வெற்றிக்கான பார்முலா என்பது எனக்கு மட்டும் தான் ஒர்க் அவுட் ஆகும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள், அதுபோல அவரவர்களுக்கான வெற்றிக்கான ஃபார்முலாவும் வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ரொமான்ஸ் & காதல்: அதேபோல், எனது பாடல்களில் காதல் இல்லை, ரொமான்ஸ் இல்லை என்று தொடர்ந்து கூறி கொண்டு வருகிறார்கள். காதல் பாடல்கள் சில உருவாக்கி வைத்துள்ளேன், விரைவில் ஒவ்வொன்றாக வெளிவரும். மேலும் எனது பாடல்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்லும் ரசிகைகள் பலரும் உள்ளார்கள். அதற்காக அதை நான் காதலாக கருத முடியாது. காரணம் அவர்கள் எனது வேலையை ரசிக்கிறார்கள். அதற்குத்தான் அன்பு செலுத்துகிறார்கள். அதனால் அவர்களுக்கு நான் யாரென்று தெரிய வாய்ப்பில்லை. என்னைப் பார்த்து என்னை கவனித்து, எனது செயல்பாடுகள், நடவடிக்கைகள் பிடித்துப்போய், அதன் பின்னர் காதல் என்றால் அப்போது யோசிக்கலாம்" என்று கூறியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











